ஹர்பஜன், முரளி, சக்லைன் ஆகிய பவுலர்களை பந்து வீச அனுமதித்திருக்கக் கூடாது என்று ஆஸி.முன்னாள் நடுவர் டேரல் ஹேர் கூறியதற்கு ஹர்பஜன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
ஐசிசி.யின் முன்னாள் உயர்மட்ட நடுவர் டேரல் ஹேர், பந்துவீசாமல் த்ரோ செய்பவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேற்றிருக்க வேண்டும் என்று கூறிய கருத்திற்கு ஹர்பஜன் சிங் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் நேர்காணலில் நடுவர் டேரல் ஹேர் கூறியது:
1990-ஆம் ஆண்டுகளின் இறுதியிலேயே நான் கூறினேன், த்ரோ செய்பவர்களை அனுமதித்தால் ஒரு காலத்தில் த்ரோ செய்பவர்களே பவுலர்களாக உருவாகிவிடுவார்கள் என்று எச்சரித்தேன். சக்லைன் முஷ்டாக், ஹர்பஜன், முரளிதரன் ஆகியோரை பின்பற்றுவார்கள் என்று எச்சரித்தேன். இப்போது செய்வது போல் அப்போதே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தொடர்ந்து வீச அனுமதிக்கப்பட்டனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என்றார்.
இதற்கு மும்பை மிட்-டே பத்திரிகையில் பதில் அளித்த ஹர்பஜன், “இவரது பேச்சு கொஞ்சம் அதிகம்தான். நாங்கள் பந்து வீச்சில் வரம்பு மீறவில்லை, ஆனால் டேரல் ஹேர் பேச்சில் வரம்பு மீறிவிட்டார்” என்று கூறிய பிறகு இந்தியில் அவர் கூறியதன் வாசகத்தின் ஆங்கில பெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் "டேரல் ஹேருக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல் தெரிகிறது" என்று ஹர்பஜன் கூறியது மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்தான் பந்து வீசினோம், என்னையும் முரளிதரனையும் ஐசிசி. ஒருமுறைக்கு மேல் பரிசோதனை செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது. சரி, பிறகு ஏன் நான் வீசிய போது டேரல் ஹேர் ஆட்சேபணை எழுப்பாமல் இருந்தார்? ஐசிசி நடுவர் பொறுப்பை இழந்து விடுவோம் என்ற பயம்தான் காரணமா?
நாங்கள் கண்டு பிடித்த தூஸ்ராவை இப்போது இளம் தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர், அதற்காக வரம்புக்கு மீறி முழங்கையை மடக்கி வீசினால் தான் தூஸ்ரா விழும் என்று அர்த்தமில்லை, முறையாக வீசியே தூஸ்ராவைச் சாதிக்க முடியும்.
தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே அனைத்தும் அணுகப்படுகிறது. எனவே தொழில்நுட்பத்தை கேள்வி கேட்பதை விடுத்து டேரல் ஹேர் தனது வாயை மூடிக் கொண்டு போகட்டும்” என்று காட்டமாக பேசியுள்ளார்.