அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றவுடன் ஜான் ரைட் அறிமுகம் செய்த முறையை மீண்டும் புகுத்தியுள்ளார். ஜான் ரைட் பயிற்சிக் காலத்தில் இது பெரிய அளவுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு buddy system என்று பெயர். 2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது ஜான் ரைட் இதனை அறிமுகம் செய்தார். அதாவது அவர் அப்போது பேட்ஸ்மென் வி.வி.எஸ். லஷ்மணையும் ஜாகீர் கானையும் இணையாக்கினார், அதாவது ஜாகீர் கானின் அதிகாரபூர்வமற்ற பேட்டிங் பயிற்சியாளர் லஷ்மண், அதே போல் அணிக்குத் தேவைப்படும் போது பந்து வீசினால் லஷ்மணுக்கு ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளர்.
இந்த முறை ஜான் ரைட் காலத்திற்குப் பிறகு நீடித்தது. தற்போது அனில் கும்ப்ளே இதனை மீண்டும் அறிமுகம் செய்துள்ளார். அதாவது ஷிகர் தவண், மொகமது ஷமி, விராட் கோலி, புவனேஷ் குமார் என்று இணையாக்கியுள்ளார். இவர்கள் பரஸ்பர பேட்டிங் பவுலிங் பயிற்சியாளர்களாக உதவி செய்து கொள்வார்கள்.
ஸ்டூவர் பின்னியுடன் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது வீரர்களுக்கிடையே பரஸ்பர புரிதல் நன்றாக இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கம், மேலும் வீரர்கள் அழுத்தங்களைச் சந்திக்காமல் ரிலாக்ஸாக விளையாடுவதையும் இந்த முறை வலியுறுத்துகிறது.
இதன் முதற்கட்டமாக சனிக்கிழமையன்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் வழக்கத்துக்கு மாறாக, முதலில் பேட்டிங்கிற்காக கால்காப்பைக் கட்டியவர் அமித் மிஸ்ரா. நீண்ட நேரம் இவருக்கு வீசிய முதல் ‘ஸ்பின்னர்’ செடேஸ்வர் புஜாரா. இதில் ரஹானேவை ஒரு பந்தில் புஜாரா பீட் செய்ததும் நடந்தது. அதாவது புஜாராவுக்கு லெக் ஸ்பின் சொல்லிக் கொடுத்தார் அமித் மிஸ்ரா, அதே போல் அமித் மிஸ்ராவின் பேட்டிங்கை மெருகேற்றினார் புஜாரா.
இந்த முறையினால் பின்கள வீரர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்வதில் சீரான ஒரு தன்மையை ஏற்படுத்தவும், அதே போல் பகுதி நேர பவுலர்களின் எண்ணிக்கையைக் கூட்டவும் அனில் கும்ப்ளே தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இது கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.