சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நவம்பர் 11-ம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது.
இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார் கூறுகையில், “நாங்கள் கண்டிவ்லி பகுதியில் கட்டியிருக்கும் புதிய கிளப்புக்கு சச்சினின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளோம். அதன் திறப்பு விழா 11-ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சச்சினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சச்சினுடைய பாராட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த பாராட்டு விழா அதிகாரப்பூர்வ பாராட்டு விழாவகும். பிசிசிஐ தலைவர் சீனிவாசன், மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் உள்ளிட்டோர் சச்சினின் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக பிசிசிஐ சார்பில் சச்சினுக்கு வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது” என்றார்.
சச்சினின் பாராட்டு விழாவுக்கு மும்பையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அழைக்கப்படவுள்ளனர்.