விளையாட்டு

புஜாரா, அஸ்வினுக்கு தரவரிசையில் பின்னடைவு

செய்திப்பிரிவு

இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன் சேதேஷ்வர் புஜாரா, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோர் தங்களின் தரவரிசையில் தலா ஓர் இடத்தை இழந்துள்ளனர். எனினும் இந்திய வீரர்களில் இவர்கள் மட்டுமே தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா 6-வது இடத்திலும், பௌலர்கள் தரவரிசையில் அஸ்வின் 8-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி தொடர்ந்து 11-வது இடத்தில் இருந்தபோதிலும், கேப்டன் தோனி 5 இடங்களை இழந்து 33-வது இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளார். நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா 6 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய பௌலர்களில் அஸ்வினுக்கு அடுத்தபடியாக பிரக்யான் ஓஜா 11-வது இடத்தில் உள்ளார். முன்னதாக 9-வது இடத்தில் இருந்த அவர், இப்போது 2 இடங்களை இழந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் 22-வது இடத்தில் உள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் உள்பட 424 ரன்கள் குவித்த இலங்கையின் சங்ககாரா 5 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் சந்தர்பால் 3-வது இடத்திலும் உள்ளனர்.

நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் 5-வது இடத்தைப் பிடித்துள்ள அதேவேளையில் அந்த அணியின் மற்றொரு வீரரான கேன் வில்லியம்சன் முதல்முறையாக 19-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 15 இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் இருபது இடங்களுக்குள் வந்துள்ளார். அவர் தற்போது 20-வது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதான் அவருடைய அதிகபட்ச தரவரிசை. இதேபோல் அந்த அணியின் டிம் சௌதி முதல்முறையாக 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT