விளையாட்டு

ரியோ ஓபன்: காலிறுதியில் நடால்

செய்திப்பிரிவு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட நடால், அதன்பிறகு இப்போது ரியோ ஓபனில் பங்கேற்றுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஆல்பர்ட் மான்டனாஸை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். நடால் தனது காலிறுதியில் உலகின் 48-ம் நிலை வீரரான போர்ச்சுக்கலின் ஜாவோ சௌசாவை சந்திக்கிறார்.

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியின்போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் கடுமையாகப் போராடித் தோற்ற நடால், இப்போது தனது இடுப்புப் பகுதியில் எலாஸ்டிக் பட்டை அணிந்து விளையாடி வருகிறார்.

போட்டிக்குப் பிறகு பேசிய நடால், “முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தாக்கத்தை இப்போதும் உணர்கிறேன். காயம் காரணமாக இரண்டரை வாரங்கள் ஓய்வில் இருந்து மீண்டும் டென்னிஸுக்கு திரும்புவது அவ்வளவு எளிதல்ல. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் இப்போதும் எனக்கு தொந்தரவு அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் இந்தப் போட்டியில் விளையாடுவது என நான் எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT