மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அமெரிக்க நீச்சல் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான மைக்கேல் பெல்ப்ஸுக்கு 6 மாத காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், 2015-ம் ஆண்டுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் மது அருந்தி விட்டு காரை ஓட்டியதற்காக போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரது சொந்த ஊரான பால்டிமோரில் கைது செய்யப்பட்டார்.
மைக்கேல் பெல்ப்ஸ் குடித்து விட்டு காரை ஓட்டியுள்ளதுடன் பால்டிமோர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் அதிவேகமாக காரை இயக்கியுள்ளார் என காவல்துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.
இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பின்னர், அமெரிக்க நீச்சல் கழகம் பெல்ப்ஸ் மீது தடை விதித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் சக் வீல்கஸ் கூறுகையில், "பெல்ப்ஸ் தவறான நடவடிக்கைக்கு தண்டனை வழங்குவது அவசியம். நீச்சல் கழகத்திற்கு களங்கம் விளைவிப்பதாக அவரது நடவடிக்கை அமைந்துள்ளது" என்றார்.
பெல்ப்ஸ் சர்வதேச நீச்சல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர் வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மைக்கெல் பெல்ப்ஸ் 18 தங்கப் பதக்கங்களை குவித்து சாதனையாளராக திகழ்கிறார்.