விளையாட்டு

டிவில்லியர்ஸ், தெ.ஆ. கிரிக்கெட் வாரியத்தின் மீது ஆஷ்வெல் பிரின்ஸ் பாய்ச்சல்

இரா.முத்துக்குமார்

ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து சொதப்பி வருவதையடுத்து அந்த அணிக்கு ஆடிய ஆஷ்வெல் பிரின்ஸ், கேப்டன் டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

நாட்டுக்காகத்தான் வீரர்களே தவிர வீரர்களுக்காக நாடல்ல என்பதை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு உணர்த்த வேண்டும், மாறாக தனிநபர்களின் விருப்பத்தெரிவுகளுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இசைந்து கொடுக்கிறது என்கிறார் ஆஷ்வெல் பிரின்ஸ்.

கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் தன் விருப்பத்துக்கு ஏற்ப சில தொடர்களில் விளையாடுவதும் சில தொடர்களிலிருந்து விலகுவதுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்க வட்டாரங்கள் ஆஷ்வெல் பிரின்ஸ் விமர்சனத்தை அணுகுகின்றன.

இதனால்தான் ஒரு அணியாக இன்னும் தென் ஆப்பிரிக்கா திரண்டெழ முடியவில்லை என்கிறார் ஆஷ்வெல் பிரின்ஸ்.

இது குறித்து அவர் கூறும்போது, “நாட்டுக்காக ஆடுவதன் கவுரவத்தை வீரர்களை உணரச் செய்ய இதுதான் தருணம், இதற்கு நேர் எதிராக தற்போது இருந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

இந்தத் தொடரில் டாப் 10 பேட்ஸ்மென்களில் 4 வீரர்களுடனும், உலகின் இரண்டு டாப் பவுலர்களுடனும் சென்றிருக்கிறோம். எனவே திறமைக்குப் பஞ்சமில்லை, ஒருவேளை மாற்றம் எதில் தேவையெனில் அணுகுமுறையில்தான் தேவை என்று தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT