விளையாட்டு

நிறைவடைந்தது ஆசிய விளையாட்டு: பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் - இந்தியா 8-வது இடம்

பிடிஐ

தென் கொரியாவில் நடைபெற்ற 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் 16 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 45 நாடுகள் பங்கேற்றன. 36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வழக்கம்போல் இந்த முறையும் சீனாவே முதலிடத்தைப் பிடித்தது. 151 தங்கப் பதக்கம், 108 வெள்ளிப் பதக்கம், 83 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 342 பதக்கங்களைக் குவித்த சீனா, ஆசிய பிராந்தியத்தில் தாங்கள் அசைக்க முடியாத அணி என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது.

தென் கொரியா 234 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 200 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும், கஜகஸ்தான் 84 பதக்கங்களுடன் 4-வது இடத்தையும், ஈரான் 21 தங்கம் உள்பட 57 பதக்கங்களுடன் 5-வது இடத்தையும் பிடித்தன. இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களுடன் 8-வது இடத்தைப் பிடித்தது.

கலக்கிய இந்தியர்கள்

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க வேட்டையைத் தொடங்கிவைத்த பெருமை இந்திய ராணுவத்தில் பணிபுரியும் துப்பாக்கி சுடுதல் வீரரான ஜிது ராயையே சேரும். அவர் போட்டியின் முதல் நாளில் 50 மீ. பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.

இந்திய கபடி அணிகள் இரு தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2016 ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றது. இதன்மூலம் ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது ஹாக்கி அணி. இதற்கு முன்னர் 1966-ல் இதேபோன்று பாகிஸ்தானை வீழ்த்தி

ஆசிய சாம்பியனாகியிருக்கிறது இந்தியா.

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மேரி கோம், மல்யுத்தத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்று தந்த யோகேஷ்வர் தத், ஸ்குவாஷில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த சவுரவ் கோஷல் தலைமையிலான அணியினர், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சானியா-மைனேனி ஜோடி, மகளிர் வட்டு எறிதலில் தங்கம் வென்ற சீமா பூனியா, மகளிர் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று தந்த தின்டு லூக்கா உள்ளிட்ட அணியினர் ஆகியோர் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

சர்ச்சைக்குள்ளான சரிதா

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, தென் கொரியா குத்துச்சண்டை வீராங்கனை ஜினா பார்க் இடையிலான அரையிறுதிப் போட்டி பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஜினா பார்க்கிற்கு சாதகமாக நடுவர் தீர்ப்பு வழங்கியதாக குற்றம்சாட்டிய சரிதா, தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை உதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜகார்த்தாவில் அடுத்த போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து போட்டியின் ஜோதி, கொடி ஆகியவை அடுத்த ஆசியவிளையாட்டுப் போட்டியை நடத்தவுள்ள இந்தோனேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2018-ம் ஆண்டு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது. முன்னதாக வியட்நாம் நடத்துவதாக இருந்தது. ஆனால் அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்டது.

பிசிசிஐ மீது ஓசிஏ சாடல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டி இருந்த போதும்கூட, தொடர்ந்து 2-வது முறையாக இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பிசிசிஐ மீது கடுமையாக சாடியுள்ள ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ) தலைவர் சேக் அஹமது அல் பஹாட், “தொடர்ந்து 2-வது முறையாக இந்தியா சார்பில் கிரிக்கெட் அணி பங்கேற்கவில்லை. அவர்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்கிறேன். அதேநேரத்தில் அவர்களுக்கு போட்டியை வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமில்லை. கிரிக்கெட்டை பணம் சம்பாதிக்கும் தொழிலாகவே நடத்துகிறார்கள் என்பதை வருத்தத்தோடு சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், “9,700 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 பேர் மட்டுமே ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இதுதவிர சில உலக சாதனைகளும், ஆசிய சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன” என்றார்.

சரிதா விவகாரம் குறித்துப் பேசிய பஹாட், “நடுவரின் பாரபட்ச தீர்ப்பு தொடர்பாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி உணர்ச்சிவசப்பட்டது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் அவர் பதக்க மேடையில் கதறியழுது கொண்டு பதக்கத்தை உதறியது தேவையற்றது” என்றார்.

இந்தியாவுக்கு இறங்குமுகம்

இந்திய அணி 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களைக் குவித்து 8-வது இடத்தைப் பிடித்தது. 2010-ல் சீனாவின் குவாங்ஜௌ நகரில் நடைபெற்ற முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என 65 பதக்கங்களை வென்று 6-வது இடத்தைப் பிடித்தது. ஆனால் இந்த முறை பதக்க எண்ணிக்கையில் மட்டுமின்றி, பதக்கப் பட்டியலிலும் இரண்டு இடங்களை இழந்து சரிவுக்குள்ளாகியிருக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற வீரர், வீராங்கனைகளின் மொத்த எண்ணிக்கை 516. ஆனால் வீரர்களின் எண்ணிக்கையோடு பதக்கங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் மிகமிக குறைவுதான். இந்தியாவுக்கு இந்த முறை ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்றது மட்டுமே.

SCROLL FOR NEXT