விளையாட்டு

பி.வி.சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்த விளம்பர நிறுவனம்

செய்திப்பிரிவு

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை விளை யாட்டு மேலாண்மை நிறுவனமான பேஸ்லைன் ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு ஏற்கெனவே சுமார் ரூ.13 கோடிக்கு மேல் பரிசுத் தொகை குவிந்தது. இதுதவிர ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த நகைகளும் பரிசாக அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் பேஸ்லைன் என்ற மேலாண்மை நிறுவனம் சிந்துவின் பிராண்ட் புரோபைல், காப்புரிமை, லைசென்ஸ் ஆகிய வற்றை மொத்தமாக 3 வருட காலத்துக்கு ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான துஹின் மிஸ்ரா கூறும்போது, ‘‘நாங்கள் சிந்துவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதுவரை கிரிக்கெட் வீரராக இல்லாமல் மேற்கொண்ட ஒப்பந்தங்களிலேயே இதுதான் பெரிது. அடுத்த 3 ஆண்டுகளில் அவரது மதிப்பை நாங்கள் இன்னும் அதிகரித்து காட்டுவோம்.

16 நிறுவனங்கள் தற்போது சிந்துவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்துள்ளன. இவற் றில் 9 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இறுதி முடிவு எடுத்துள்ளோம். ஒப்பந்தம் செய்துகொள்ள அவரை பலரும் அணுகி வருகின்றனர். இவற்றில் நிதி நிறுவனங்கள், மகளிர் தொடர் பான நிறுவனங்களும் அடங்கும். சிந்துவின் பயிற்சி நேரம் பாதிக் கப்படாமல் விளம்பர பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இதற்கிடையே சிந்து தனது பயிற்சியாளர் கோபிசந்தை போன்றே உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தொடர் பான விளம்பரங்களில் நடிக்க மறுத் துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT