விளையாட்டு

மெஸ்ஸியின் பந்து கடத்தும் திறன் அபாரமானது

செய்திப்பிரிவு

மெஸ்ஸியின் பந்தைக் கடத்தும் திறன் அபாரமானது என பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோ புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாகா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் லா லிகா போட்டித் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

இப்போட்டியில் பெட்ரோவும், அலெக்ஸிஸும் முறையே 2, 3-வது கோல்களை அடித்தனர். இதற்கு மெஸ்ஸியின் அபார ஆட்டமே காரணம். எதிரணியினரை மிக எளிதில் ஏமாற்றி, சக வீரர்களுக்கு எளிதில் பந்தைக் கடத்திக் கொடுத்தார் மெஸ்ஸி.

இதனால், கடந்த சில நாட்களாகத் தடுமாறி வந்த பார்சிலோனா மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இது தொடர்பாக பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோ கூறுகையில், “லயோனல் மெஸ்ஸியைப் பற்றி என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அவரின் செயல்கள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.

அவர் ஆட்டத்தை மிகச்சிறப்பாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பந்தை சிறப்பாகக் கடத்தினார். ஆட்டத்தை முடிப்பதில் அவர் வல்லவர். அவர் பந்தை மீட்பதில் சிறந்தவர். ஒரு கால்பந்து வீரராக அவரால் எதுவும் செய்ய முடியும். பந்தைக் கடத்துவதில் மட்டும் திறமை மிக்கவர் அல்ல, சரியான நேரத்தில் அதைச் செய்வதுதான் அற்புதம். வரும் போட்டிகளிலும் அதை அவர் சிறப்பாகச் செய்யும்பட்சத்தில் கோல்கள் ஒரு பிரச்சினையே இல்லை” என்றார் அவர்.

SCROLL FOR NEXT