சென்னை கால்பந்து லீக் போட்டியில் சேலஞ்சர்ஸ் யூனியன் அணி வெற்றியுடன் தொடங்கியது. அந்த அணியின் ஹாரிஷ் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து லீக் போட்டிகள் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கின. முதல் நாளில் ஏ டிவிசன் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் சேலஞ்சர்ஸ் யூனியனும், மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனிட்டும் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சேலஞ்சர்ஸ் யூனியன் அணியிடம் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் அணியின் ஆட்டம் எடுபடவில்லை.
இதனால் தொடர்ச்சியாக கோல் மழை பொழிந்த சேலஞ்சர்ஸ் யூனியன் அணி 7-2 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனிட் அணியைத் தோற்கடித்தது. சேலஞ்சர் அணி தரப்பில் ஹாரிஷ், ஹாட்ரிக் கோலடித்தார். ஆரோன் சுரேஷ் 2 கோல்களும், தமிழ்ச் செல்வன், சரவணன் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
மெட்ராஸ் ஸ்போட்டிங் அணி தரப்பில் மமுடு இரு கோல்களை அடித்தார்.
நேதாஜி கிளப் டிரா
மற்றொரு ஆட்டத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், மத்திய உற்பத்தி வரித்துறை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நேதாஜி அணி தரப்பில் அசோக் குமார், இளவரசு ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். உற்பத்தி வரித்துறை அணி தரப்பில் சதீஷ்குமார், பிரவீண் காந்தி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.