2014 ஏர்செல் சென்னை ஓபனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என கனடா டென்னிஸ் வீரர் வசேக் போஸ்பிஸில் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நிக் போலேட்டரி அகாட மியில் பயிற்சியை முடித்துவிட்டு சென்னை ஓபனில் பங்கேற்பதற்காக தனது பயிற்சியாளர் ஃபிரடெரிக் ஃபான்டாங்குடன் சென்னை வந்திருக்கிறார் வசேக் போஸ்பிஸில். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள போஸ்பிஸில் கூறியதாவது:
சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது இனிமையாக இருக்கிறது. இங்கு வருவதை நான் விரும்புகிறேன். இங்குள்ள சூழல் மிக நன்றாக இருக்கிறது. சென்னை ஓபன் போட்டி நடைபெறவுள்ள இந்த டென்னிஸ் மைதானம் எனது ஆட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்றார்.
மோனோநியூகிளியோசிஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட போஸ்பிஸில் அதிலிருந்து மீண்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் விளையாடத் தொடங்கியபோது சர்வதேச தரவரிசையில் 140-வது இடத்தில் இருந்தார்.
எனினும் தனது அபார ஆட்டத்தால் இப்போது 32-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இதுதான் அவருடைய டென்னிஸ் வாழ்க்கையில் அதிகபட்ச தரவரிசை. அது தொடர்பாகப் பேசிய அவர், “மோனோநியூகிளியோசிஸ் தொற்றுநோயிலிருந்து நான் மீளாமல் இருந்திருந்தால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டது உள்ளிட்ட எதுவுமே சாத்தியமாகியிருக்காது. 2012 டிசம்பர் முதல் 2013 பிப்ரவரி வரை தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தேன். எனது மனதின் ஓரத்தில் சிறிய பயம் இருந்தாலும், பூரண குணமடைந்து மீண்டும் டென்னிஸுக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.
ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங் உள்ளிட்டோர் மோனாநியூகிளியோசிஸ் தொற்று நோயிலிருந்து மீண்டு வருவதற்காக இப்போதும் போராடி வருவது தனக்கு தெரியும் எனக்கூறிய போஸ்பிஸில், “அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் சீக்கிரமாக அதிலிருந்து மீண்டுவிட்டேன்” என்றார்.
2012 சென்னை ஓபனில் முதல்முறையாக பங்கேற்றது குறித்துப் பேசிய போஸ்பிஸில், “உண்மையைச் சொல்வதானால் சென்னை ஓபனில் பங்கேற்பதை நான் விரும்புகிறேன். 2012-ல் என்னுடைய சிறந்த மெயின் டிரா (பிரதான சுற்று) செயல்பாடுகளில் சென்னை ஓபனும் ஒன்று. அதனால் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டேன். 2012 சென்னை ஓபனில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன்” என்றார்.
தனது பயிற்சியாளர் ஃபான்டாங்கை வெகுவாகப் பாராட்டிய போஸ்பிஸில், “எனது 5 வயதில் தொடங்கி எனது வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களில் எனது தந்தையே எனக்குப் பயிற்சியளித்தார். எனினும் ஃபான்டாங் எனது பயிற்சியாளரான பிறகே ஆக்ரோஷமான வீரராகவும், எதிராளிகளுக்கு ஆபத்தான வீரராகவும் நான் உருவெடுத்திருக்கிறேன்” என்றார்.
டென்னிஸில் கனடா வளர்ச்சி கண்டிருப்பதில் அதன் பயிற்சி இயக்குநர் லூயிஸ் போர்ஃபிகாவுக்கு அளப்பரிய பங்கு இருப்பதாகக் குறிப்பிட்ட போஸ்பிஸில், “டேவிஸ் கோப்பை வரலாற்றில் கனடா அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியதன் பின்னணியில் லூயிஸின் கடின உழைப்பு இருக்கிறது. கனடா வீரர்களுடன் இணைந்து அவர் மிகச்சிறப்பாக செயலாற்றி வருகிறார்” என்றார்.
2014 சென்னை ஓபன் குறித்துப் பேசிய போஸ்பிஸில், “தற்போதைய தருணத்தில் எனது முழுக்கவனமும் முதல் சுற்றின் மீதுதான் உள்ளது. இங்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பது தெரியும். அதே அளவுக்கு எல்லோருக்கும் நெருக்கடியும் இருக்கும். இந்த முறை நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்” என்றார்.