இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மிர்பூர் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது
154 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக இருந்தது. துவக்க வீரர்கள் ஷிகர் தவாண் 2 ரன்களுக்கு, ரோஹித் சர்மா 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இலங்கையின் கடினமான பந்துவீச்சால் பவுண்டரி, சிக்ஸர்கள் இன்றி இந்தியாவின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. அவ்வபோது பவுண்டரி அடித்த ரெய்னா, இந்தியாவைக் காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரெய்னா 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரஹானே டக் அவுட்டானார். தொடர்ந்து வந்த இந்திய வீரர்கள் அனைவரும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என சம்பிரதாயத்துக்கு அடித்து விட்டு வெளியேறினர். 17-வது ஓவரின் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களாக இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில், அஸ்வின் மற்றும் பின்னி ஜோடி களத்தில் இருந்தது.
19-வது ஓவரில் அஸ்வின் அதிரடியாக அடித்த சிக்ஸர் மற்றும் பவுண்டரியால், கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்று நிலை மாறியது. அந்த ஓவரில் அஸ்வின் ஒரு பவுண்டரி அடிக்க, பின்னி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடைசி இரண்டு பந்துகள்ல் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தில் அஸ்வின் வெளியேறினார். கடைசிப் பந்தை சந்தித்த மிஸ்ராவும் பவுல்டாக 5 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த இலங்கையின் துவக்க ஆட்டக்காரர் பெரேரா 15 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜெயவர்த்தனேவும் வேகமாக ரன் குவித்தாலும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழக்க 18-வது ஓவர் முடிவில் 124 ரன்கள் மட்டுமே இலங்க அணி சேர்த்திருந்தது. ஆனால், குலசேகராவின் அதிரடி ஆட்டத்தால், கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் சேர, இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.