ஆஷஸ் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் மோதலில் ஈடுபட்டு, அவரை வெறுப்பேற்றும்படி பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி, அப்போட்டியின் சம்பளத்தில் 20 சதவீதத்தை அபராதமாக விதித்தது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
இந்த விவகாரத்தில், மைக்கேல் கிளார்க் தனது செய்த தவறை ஒப்புக்கொண்டதால், அவரிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை.
முன்னதாக, பிரிஸ்பேனில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் பேட்டிங் செய்தபோது, வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், மைதானத்தில் ஆண்டர்சனை கேலி செய்யும் வகையில் நடந்து கொண்டனர்.
அப்போது, ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஜான்சனின் அதிவேகப் பந்துவீச்சில் சிக்கி கையை உடைத்துக் கொள்ளத்தயாரா என்று ஆண்டர்சனிடம் கேட்டு கேலி செய்திருக்கிறார். அவரதுப் பேச்சு ஸ்டெம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவானது.
இதையடுத்து மைதானத்தில் கிளார்க் தவறாக நடந்து கொண்டது குறித்த குற்றச்சாட்டை நடுவர்கள் குமார் தர்மசேனா, மூன்றாவது நடுவர் மராய்ஸ் ஆகியோர் ஐசிசி விசாரணைக்குழுவிடம் எடுத்துச் சென்றனர். இதையடுத்து ஐசிசி விதிகளின்படி கிளார்க்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.