இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் டெஸ்ட் தொடர் குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறும்போது, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா செய்ய முடியாததை பாகிஸ்தான் அணி செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
ஜூலை 14-ம் தேதி லார்ட்ஸில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாவது:
பாகிஸ்தான் அணி வீரர்களிடத்தில் உள்ள திறமை அசாதாரணமானது. நான் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்திருக்கிறேன், அவர்கள் செய்ய முடியாததை பாகிஸ்தான் வீரர்கள் செய்ய முடியும் என்பது உண்மையில் மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கிறது.
திறமைகளினுள்ளே பொறுமையை செலுத்துவதுதான் என் பணி. மொகமது ஆமிர், சொஹைல் கான் வீசியதைப் பார்த்தேன். அவுட் ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர், இன்ஸ்விங்கர் என்று வீசிக் கொண்டேயிருக்கின்றனர், மற்ற அணிகளிடத்தில் இருக்கும் பொறுமை இல்லை. ஆனால் திறமை உயர்மட்டத்தில் இருக்கிறது. ஆகவேதான் திறமைக்குள் பொறுமையை செலுத்தி வருகிறேன்.
எனது பயிற்சி அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் எனது பயிற்சி அளிக்கும் பாணியை மாற்றி கொள்ளவில்லை, ஏனெனில் எது சரி என்று நமக்குத் தெரிகிறதோ அதில் சமரசம் செய்து கொள்ளுதல் கூடாது.
அணிகளை நடத்துவதில் சிலபல வழிமுறைகள் உள்ளன, இந்த வழிமுறைகளே வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வது.
இவ்வாறு கூறினார் மிக்கி ஆர்தர்.