அர்ஜர்பைஜான் நாட்டின் கபாலா நகரில் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து - ஜிது ராய் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
இந்த பிரிவின் இறுதி சுற்றில் இந்திய ஜோடி 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. பிரான்ஸ் அணி ஈரானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. கலப்பு அணி பிரிவு இந்த ஆண்டு முதல் உலகக் கோப்பை தொடர் களில் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் ஹீனா சித்து - ஜிது ராய் ஜோடி தங்கப் பதக்கம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்ற ஹீனா சித்து, ஜிது ராய் ஆகியோர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறினர். ஆடவர் பிரிவில் ஜிது ராய் தகுதி சுற்றில் 12-வது இடத்தையே பிடித்தார். இதபோல் மகளிர் பிரிவில் ஹீனா சித்து 9-வது இடத்தை பிடித்தார். இந்த பிரிவில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.
கபாலாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் சீனா பதக்கப் பட்டியலில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.