உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்தது. இந்திய வீரர் அமித் குமார் தான் பங்கேற்ற 5 போட்டிகளில் 4-ல் வெற்றி கண்டார்.
சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் ஆடவர் ப்ரீஸ்டைல் மல்யுத்த உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலீஸை அடுத்த போரம் நகரில் கடந்த 15, 16 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, துருக்கி மற்றும் ஆர்மேனியாவை தோற்கடித்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானிடம் தோல்வி கண்டது.
இதனால் அந்தப் பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி 5 மற்றும் 6-வது இடத்துக்கான போட்டியில் மங்கோலியாவை எதிர்கொண்டது. இதில் மங்கோலியா 5-3 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவைத் தோற்கடித்து 5-வது இடத்தைப் பிடித்தது. இந்தியாவுக்கு 6-வது இடம் கிடைத்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் அமித் குமார் (57 கிலோ எடைப் பிரிவு), மங்கோலியாவின் நோமி பேட்போல்டை தோற்கடித்து இந்தியா முன்னிலை பெற உதவினார். அடுத்த இரு ஆட்டங்களில் பஜ்ரங் (62 கிலோ), ரஜினிஷ் (65 கிலோ) ஆகியோர் தோல்வி கண்டதால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனினும் அடுத்த இரு ஆட்டங்களில் அமித் குமார் டாங்கர் (70 கிலோ), பிரவீண் ரானா (74) ஆகியோர் வெற்றி கண்டு இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர்.
கடைசி இரு ஆட்டங்களில் பவன் குமார் (86 கிலோ), சத்திவார்ட் காடியன் ஆகியோர் தோல்வி கண்டதால் இந்தியாவின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
இறுதிப் போட்டியில் ஈரான் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது. ரஷியா 2-வது இடத்தையும், அமெரிக்கா 3-வது இடத்தையும், உக்ரைன் 4-வது இடத்தையும் பிடித்தன.