லார்ட்ஸ் டெஸ்ட் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 76 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல முறையில் தொடங்கியுள்ளது.
நல்ல சூரிய வெளிச்சத்தில் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறிய மிஸ்பா தயங்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், அதன் படி மொகமது ஹபீஸ், ஷான் மசூத் களமிறங்கினர்.
ஸ்டூவர்ட் பிராட் வழக்கம் போல் நல்ல அளவு மற்றும் திசையில் வீச அவரை நிதானமாக ஆடியது பாகிஸ்தான் தொடக்க ஜோடி. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் 25 வயது ஜேகப் பால் அவ்வப்போது மணிக்கு 89 மைல்கள் வேகத்தைத் தொட்டு தொடக்க வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தார்.
முதல் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களை 12 ஓவர்களில் சேர்த்தது, மொமகது ஹபீஸ் 11 ரன்களில் இருந்த போது பிராடை டிரைவ் ஆடும் போது மட்டையின் விளிம்பில் பட்டு 3-வது ஸ்லிப்பில் இருந்த ஜேம்ஸ் வின்சிடம் சென்றது, ஒரு கையில் பிடிக்க முயன்றார் முடியவில்லை.
ஷான் மசூத் 29 பந்துகள் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தை விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்து வெளியேறினார், கிறிஸ் வோக்ஸ் அருமையாக வீசினார், அவ்வப்போது எல்.பி. அப்பீல்களும் நிகழ்ந்தன. ஆனால் நடுவர் தீர்ப்பு துல்லியமாக அமைந்தது.
மொகமது ஹபீஸ் அவ்வப்போது ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தில் பீட் ஆனார், சில நல்லபந்துகளிலும் அவர் தடுமாறினார், ஆனால் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தை தேவையில்லாமல் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேரினார். ஆனால் இது டாப் எட்ஜ் கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு இடைவேளையின் போது யூனிஸ் கான் 18 ரன்களுடனும், அசார் அலி 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.