ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தன்னை தேர்வு செய்யாதது ஏமாற்றமாகவும், வேதனையாகவும் இருக்கிறது என்று சுரேஷ் ரெய்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கூறியதாவது:
இப்போது நான் என்ன கூற முடியும்? ஏமாற்றமாகவும் வேதனையாகவும் உள்ளது. இம்முறை என்னைத் தேர்வு செய்வார்கள் என்றே எதிர்பார்த்தேன்.
நான் தொடர்ந்து என்னை நிரூபித்து வருகிறேன். சீரான முறையில் ரன்களை எடுத்து வருகிறேன். ஐபிஎல் தொடரிலும் நல்ல முறையில்தான் ஆடி வருகிறேன். எனவே நான் தேர்வு செய்யப்படாமல் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் மீண்டும் எனது பேட்டிங் பேசும். நிச்சயம் நான் அணிக்கு மீண்டும் திரும்புவேன்.
இவ்வாறு கூறினார் ரெய்னா.
ரெய்னாவை ஒதுக்கியது சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடையே கடும் கோபாவேசங்களைக் கிளப்பியது. ரஹானேவுக்குப் பதில் ரெய்னாவை தேர்வு செய்திருக்கலாம் என்ற ரீதியில் சமூகவலைத்தள வாசிகள் சிலர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அன்று கூறிய போது, உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் ஆட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்ததாகவும் ஐபிஎல் ஆட்டங்கள் மட்டுமல்ல என்று கூறினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரெய்னா 12 போட்டிகளில் 434 ரன்களை 146 ரன்கள் என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.