விளையாட்டு

வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து மீண்டு வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்

கே.கீர்த்திவாசன்

17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400மீ தடகளப் பிரிவில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜிவ் தான் சந்தித்த சவால்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இன்சியானில் நடைபெற்ற 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400மீ தடகளப் பிரிவில் வெண்கலம் வென்ற ஆரோக்கிய ராஜிவிற்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி அருகே உள்ள லால்குடியில் வழுதையூர் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ் பள்ளிப் பேருந்து ஓட்டுனரின் மூத்த மகன் ஆவார். குடும்பக் கஷ்டத்தைப் போக்க படிப்பை பாதியில் உதறி பணிக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இவருக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை உள்ளனர்.

2010ஆம் ஆண்டு வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் செண்டரில் ராணுவ சிப்பாயாகச் சேர்ந்தார் ஆரோக்கிய ராஜிவ்.

இந்த வேலையில் சேர்ந்த பிறகு இவரது வாழ்வில் திருப்பு முனை ஏற்பட்டது. பள்ளியில் நீளம் தாண்டுதலில் சிறப்புற்று விளங்கிய ஆரோக்கிய ராஜிவ், ராம்குமார் என்ற அவரது பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரில் 400மீ தடகளம் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இரண்டே ஆண்டுகளில் ராணுவத்தில் சிறந்த தடகள வீரர் என்ற பெயர் பெற்றார். நீளம் தாண்டுதலில் 6.60மீ தாண்டி வந்தார் இவர். ஆனால் இவருக்கு தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததாக பயிற்சியாளர் ராம்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு 30 நாட்கள் முன்னர் இவருக்கு மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. பாட்டியாலாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்தார். இதனால் இவரது பெயரை ஆசிய விளையாட்டு போட்டிகள் வீரர்கள் பட்டியலில் அறிவிக்க தடை எழுந்தது.

ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் முகமது குன்ஹி, ஆரோக்கிய ராஜிவ் நிச்சயம் அணியில் இடம்பெற்றாக வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

இன்சியானில் 400மீ தடகளத்தில் பந்தயம் தொடங்கும் போது 5ஆம் லேனில் நின்று கொண்டிருந்த ராஜிவ் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள், குடும்பக் கஷ்டம் மற்றும் பல விஷயங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஓட்டத்தில் கவனம் செலுத்திய ஆரோக்கிய ராஜிவ், சீனா, தாய்லாந்து வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி வெண்கலம் வென்றார்.

2011ஆம் ஆண்டு சென்னை மரினா கடற்கரையில் எம்.ஆர்.சி. சகாக்களுடன் செய்த ஓட்டப்பந்தய பயிற்சியே தன்னை பெரிதும் தயார்படுத்தியது என்கிறார் ஆரோக்கிய ராஜிவ்.

SCROLL FOR NEXT