விளையாட்டு

சச்சின் இடத்தில் நான் இருந்தால் முன்பே ஓய்வு பெற்றிருப்பேன்: சௌரவ் கங்குலி

செய்திப்பிரிவு

சச்சின் டெண்டுல்கரின் இடத்தில் நான் இருந்திருந்தால், ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஜனவரி 2011-க்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் சதம் ஏதும் எடுக்கவில்லை. கடந்த 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் இரு அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 ரன்களே எடுத்து ஏமாற்றமளித்தார். இதனைச் சுட்டிக்காட்டி கங்குலி இவ்வாறு கூறியுள்ளார்.

திங்கள்கிழமை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி இது தொடர்பாக மேலும் கூறியுள்ளது: கிரிக்கெட்டில் கடந்த 3 ஆண்டுகள் சச்சினுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருந்தபோதிலும் சச்சின் என்பதால்தான் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் வேறு யாருக்கும் இதுபோன்ற வாய்ப்பு ஏற்பட்டது இல்லை. நான் அவருடன் பல ஆண்டுகள் நெருங்கி பழகியுள்ளேன். கிரிக்கெட்டில் அவர் ஒரு சாம்பியன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவரது பங்களிப்பு மதிப்பிட முடியாதது என்றார் கங்குலி.

இதே நிகழ்ச்சியில் பேசிய மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, சச்சின் தனது வாழ்வின் பெரும் பகுதியை கிரிக்கெட் உடன் கழித்துள்ளார். எனவே ஓய்வுக்குப்பின் அவர் பெரிய வெற்றிடத்தை உணருவார். எனினும் வெற்றிகரமான மனிதரான அவர், தொடர்ந்து கிரிக்கெட்டுக்கு தனது சிறப்பான பங்களிப்பை செலுத்துவார் என்றார் லாரா.

SCROLL FOR NEXT