இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டாலும், இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர் பதிவியேற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அதே நேரத்தில் பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தவும், அதில் தலைவர் உள்ளிட்ட பதவிக்கான தேர்தலை நடத்தவும் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசன் மீண்டும் போட்டியிட தடைவிதிக்க வேண்டுமென்றும், வாரியத்தின் எந்தக் குழுவிலும் அவர் இடம் பெறக் கூடாது என்று உத்தரவிடக் கோரியும் பிகார் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றம் தலைவர் பொறுப்பை ஏற்க சீனிவாசனுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.
மனு விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஜெ.எஸ்.கேஹார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர் பிசிசிஐ பொறுப்பை பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளது ஏன், மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்குப் போட்டியிட சீனிவாசன் ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். எங்களுக்கு கிரிக்கெட் குறித்தும், பிசிசிஐ குறித்தும் தெரியும். அதில் உள்ள தனிநபர்கள் குறித்துத் தெரியாது. எனவே இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வரை சீனிவாசன், தலைவர் பதவியை ஏற்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.