இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி பிளங்கெட்டின் கடைசி பந்து சிக்ஸருடன் ‘டை’ ஆக, இலங்கை வீரர் சீகுகே பிரசன்னாவின் அதிரடி அரைசதம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அன்று அயர்லாந்துக்கு எதிராக ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் நழுவ விட்டு 46 பந்துகளில் 95 விளாசிய இந்த புதிய அதிரடி வீரரான சீகுகே பிரசன்னா, நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம் கண்டார், அயர்லாந்துக்கு எதிராக 23 பந்துகளில் அரை சதம் கண்டவர் அடுத்த போட்டியிலேயே 24 பந்துகளில் அரைசதம் கண்டார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் சீகுகே பிரசன்னாவின் ஸ்ட்ரைக் ரேட் 80.75-லிருந்து 111 ஆக அதிகரித்துள்ளது.
இவர் நேற்று எடுத்த 59 ரன்களில் 56 ரன்கள் பவுண்டரியிலேயே வந்தது. 50 ரன்கள் எடுத்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்ததில் ஆந்த்ரே பிளெட்சருக்கு அடுத்தபடியாக உள்ளார், பிளெட்சர் 52 ரன்களில் 50 ரன்களை பவுண்டரி மூலமே அடித்து எடுத்தார்.
நேற்று 59 ரன்கள் பிரசன்னா எடுத்ததில் முதலில் 2 சிங்கிள்கள், அதன் பிறகு 56 ரன்களை பவுண்டரி, சிக்சர்கள் மூலமே எடுத்தார் பிரசன்னா அதாவது 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசினார், பிறகு அவுட் ஆகும் முன்பாக ஒரு சிங்கிள்.
இரண்டு தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரைசதங்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் பிரசன்னா எடுத்ததும் ஒரு சாதனையாகும். அயர்லாந்துக்கு எதிரான அதிரடி 95 ரன்களின் போது ஸ்ட்ரைக் ரேட் 206.52. நேற்று இங்கிலாந்துக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 210.71. இதேபோன்று அரைசதங்களில் அடுத்தடுத்து 200 ரன்களுக்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தவர்கள் எல்டன் சிகும்பரா, மற்றும் பிரெண்டன் மெக்கல்லம், தற்போது சீகுகே பிரசன்னா. இங்கிலாந்துக்கு எதிராக 200 ரன்களுக்கும் மேலாக ஸ்ட்ரைக் ரேட்டில் 50+ ஸ்கோர் அடித்த முதல் வீரர் சீகுகே பிரசன்னா.
அதே போல் நேற்றைய போட்டி டை ஆனது, 3-வது பெரிய ஸ்கோர் டை ஆகும் சந்தர்பமாகும். 2007-08-ல் நேப்பியரில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் 340 ரன்களை டை செய்தன, பிறகு 2011 உலகக்கோப்பையில் பெங்களூருவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் 338 என்ற ஸ்கோரில் டை ஆகின. 2013-14-ல் ஆக்லாந்தில் இந்தியா-நியூஸிலாந்து ஸ்கோர் 314-ல் டை ஆனது.
லியாம் பிளெங்கெட் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ‘டை’ செய்தது போல், ஹோபார்ட்டில் 1992-93 தொடரில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் முஜ்தபா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிக்ஸ் அடித்து கடைசி பந்தில் டை செய்தார்.