விளையாட்டு

லலித் மோடிக்கு ஆயுட்கால தடை: பிசிசிஐ நடவடிக்கை

செய்திப்பிரிவு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் கமிஷனர் லலித் மோடிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆயுட்கால தடை விதித்தது.

லலித் மோடி மீதான 8 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுதி செய்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது.

சென்னையில் இன்று நடந்த பிசிசிஐ-யின் சிறப்புப் பொதுக் கூட்டத்தின் முடிவில், லலித் மோடிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் அரை மணி நேரம் மட்டுமே நடந்தது. ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்திய பிரீமியர் லீக்கின் கமிஷனராக பொறுப்பு வகித்தபோது, லலித் மோடி மிகவும் ஒழுங்கீனமாகவும், தவறாகவும் நடந்துகொண்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இன்றைய கூட்டத்தில், ஓர் உறுப்பினர்கூட லலித் மோடிக்கு ஆதரவாக இல்லை என்றும், ஒருமனதாகவே முடிவு எடுக்கப்பட்டது என்றும் பிசிசிஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, தன் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நடத்தப்படும் பிசிசிஐ-யின் சிறப்புப் பொதுக் கூட்டத்தைத் தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் லலித் மோடி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது, அவர் மீது 32 குற்றச்சாட்டுகளை அடுக்கி, அவருக்கு பிசிசிஐ இ-மெயில் அனுப்பியது.

அதேவேளையில், தன்னை குற்றமற்றவர் என்று அறிவித்துக்கொண்ட லலித் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அவ்வப்போது விளக்கங்களை அளித்து வந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT