தேசிய பள்ளிகள் விளையாட்டுப் போட்டிக்கு புதுவையைச் சேர்ந்த சிலம்பாட்ட வீரர்களை அனுப்ப புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுச்சேரி சிலம்ப கலைக் கழக தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் சிலம்பாட்டக் கலைக் கழகம் மூலம் ஏராளமான மாணவ, மாணவியருக்கு பயிற்சி தரப்படுகிறது. தற்போது முதன்முறையாக இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் ஜனவரி மாதம் 8-ம் தேதி 10-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் தேசிய போட்டியில் சிலம்பம் இடம் பெற்றுள்ளது. 8 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றால் தான் இப்போட்டியை தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு தொடர்ந்து நடத்தும். இல்லையென்றால் போட்டியில் இருந்து சிலம்பாட்டம் நீக்கப்படும் அபாயம் உள்ளது. புதுவை மாநில விளையாட்டுத் துறை சார்பில் இதுவரை இதற்காக எந்த தேர்வுப் போட்டியும் நடத்தவில்லை. இப்பிரச்னை குறித்து ஏற்கெனவே விளையாட்டுத் துறை அமைச்சர் தியாகராஜனை நேரில் சந்தித்து மனு அளித்தோம். எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து விளையாட்டுத் துறை துணை இயக்குநரிடம் கேட்டால் நிதி இல்லை என பதில்வருகிறது. சொந்தமாக பணம் செலவழித்து மாணவ, மாணவியரை அனுப்பவும் தயாராக உள்ளோம். தேசிய பள்ளிகள் விளையாட்டுப் போட்டிக்கு புதுவை மாநில அணியை அனுப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜ்குமார்.
நிர்வாகிகள் பிரகாசு, சிவக்குமார், சிவா, வேலுபிரபாகரன் உடனிருந்தனர்.