விளையாட்டு

காதலி கொலை வழக்கில் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

காதலி கொலை வழக்கில் பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தென் ஆப்பிரிக்க நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். மாற்றுத் திறனாளியான அவர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் வசித்து வந்தார். இவரது காதலி ரீவா ஸ்டீன்காம்ப். கடந்த ஆண்டு காதலர் தினத்தின்போது பிஸ்டோரியஸும் ரீவாவும் பிரிட்டோரியா உள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.

அன்றிரவு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரீவா உயிரிழந்தார். பிஸ்டோரியஸ் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டதாக போலீஸார் குற்றம் சாட்டினர். இதனை மறுத்த பிஸ்டோரியஸ், வெளிநபர் குளியல் அறைக்குள் புகுந்து விட்டதாகக் கருதி தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தோகோஷில் மிஸிபா செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், காதலியை கொலை செய்த ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.

திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை என்றாலும் தெரியாமல் செய்தாலும் கொலைதான் என்ற அடிப்படையில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT