வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 248 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மிர்புரில் 27-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த வங்க தேசம் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 730 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் மஹேல ஜெயவர்த்தனா 203 ரன்கள் குவித்தும், விதானகே 103 ரன்கள் குவித்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடக்கமே சரிவு
முதல் இன்னிங்ஸில் 498 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் மூன்றாம் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இரண்டாவது பந்திலேயே சம்சுர் ரஹ்மான் எரங்கா பந்துவீச்சில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் மார்ஷல் அயூப்(18), லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மோமினுல் ஹக், ஷகிப் அல் ஹஸன் ஜோடி ஓரளவு நிலைத்து ஆடியது. இந்த ஜோடியை பெரேரா பிரித்தார். ஷகிப் அல் ஹஸன் (25) பெரேராவிடம் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அதிரடியாக விளையாடிய மோமினுல் ஹக் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எடுத்தார். ஆனால் அவரும் பெரேராவிடம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெரோராவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அவர் 14 ரன்கள் எடுத்தார். சோஹாக் காஸி(23), ரபியுல் இஸ்லாம்(1) ஆகியோரை லக்மல் வெளியேற்றினார். ருபெல் ஹூசைன் பெரேராவின் பந்துவீச்சில் சில்வாவிடம் கேட்ச் ஆக, வங்கதேசத்தின் 2-வது இன்னிங்ஸ் 250 ரன்களில் முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 248 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் பெரேரா 5 விக்கெட்டுகளையும், லக்மல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருதை இரட்டைச் சதமடித்த மஹேலா ஜெயவர்தனே தட்டிச் சென்றார். அவர் கூறுகையில், “அணியின் வெற்றிக்காக பங்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அணியின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உண்டு. கிரிக்கெட் என்பது சூழலைச் சரியாக எதிர்கொள்வது. அதனை எங்கள் வீரர்கள் சிறப்பாகவே செய்தார்கள்” என்றார்.
இன்னிங்ஸ் வெற்றிகள்
வங்கதேசத்துக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அவற்றில் 14 போட்டிகளில் வென்றுள்ளது. இவற்றில் 8-ல் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது.
200-ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின்னர் 82 போட்டிகளில் விளையாடியுள்ள வங்க தேசம் அவற்றில் 68ல் தோல்வியடைந்துள்ளது. ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தலா 2 போட்டிகள் என மொத்தம் நான்கு போட்டிகளில் வென்றுள்ளது. இலங்கை- வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்குகிறது.