சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 மற்றொரு பிரிவு சி போட்டியில் பரோடா அணிக்காக இடது கை ஸ்விங் பவுலர்/கேப்டன் இர்பான் பதான் அருமையாக வீசி தன் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டி20 போட்டியில் அசாம் அணி கேப்டனால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட பரோடா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அசாம் அணி இர்பான் பத்தானின் அருமையான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 116 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியது.
விஜய் ஹசாரே இறுதிப் போட்டியில் குஜராத்துக்காக அருமையாக வீசி நிரூபித்த ஆர்.பி.சிங்குக்கு அடுத்ததாக தற்போது தொடர் காயங்களினால் அவதியுற்ற இர்பான் பத்தான் தனது சிறந்த டி20 பவுலிங்கை நிகழ்த்தினார். அருமையான ஸ்விங் பவுலிங் மூலம் ஒரே ஸ்பெல்லில் 4 ஓவர்களை வீசிய இர்பான் பதான், 5 விக்கெட்டுகளை வீழ்த்த 7 ஓவர்களில் 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று சரிவடைந்த அசாம் அதன் பிறகு மீளமுடியவில்லை.
தனது வழக்கமான இடது கை வீச்சினால் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வலது கை பேட்ஸ்மென்களுக்கு தொல்லை கொடுக்கும் இர்பான் பதான், இன்று பந்தை வெளியே கொண்டு சென்றும் ஒரு சில பந்துகளை எதிர்பாராதவிதமாக உள்ளே கொண்டு வந்தும் தனது பழைய ஸ்விங் வழிகளுக்குத் திரும்பினார்.
அசாம் இடது கை வீரர் பல்லவ் குமார் தாஸ் உள்ளே வரும் பந்துக்கு 1 ரன்னில் எல்.பி.ஆக, வலது கை வீரர் சருபம், கே.பி.அருண் கார்த்திக், ஆகியோரை வெளியே செல்லும் ஸ்விங் பந்துகளில் வீழ்த்தினார். இப்படியாக 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மறுமுனையில் முனாஃப் படேலும் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 13 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
அசாம் அணியில் சையத் மொகமது மட்டுமே 42 ரன்கள் எடுத்து ஒருமுனையில் நாட் அவுட்டாக இருந்தார். 8 வீரர்கள் ஒற்றை இலக்கமெடுத்தனர்.
முன்னதாக பரோடா அணியில் தொடக்க வீரர் தேவ்தார் 33 பந்துகளில் 48 ரன்களையும், டி.ஜே.ஹூடா 48 ரன்களையும் எடுத்தனர். இர்பான் பதான் (4), யூசுப் பதான் (9) ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றமளித்தனர்.
உலகக் கோப்பை டி20 அணியில் தேர்வு செய்ய இர்பான் பதான் பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.