விளையாட்டு

ஆம்லாவைப் பார்த்து புஜாரா டி20 பேட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: சேவாக் கருத்து

இரா.முத்துக்குமார்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் அதிரடி வீரர் விரேந்திர சேவாக், டி20 கிரிக்கெட்டில் செடேஷ்வர் புஜாரா தனது திறமைகளை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

அதாவது எதிர்காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் புஜாரா ஆட விருப்பப் பட்டால் நிச்சயம் அவர் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சேவாக்.

புஜாரா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2014-ல் விளையாடினார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் புஜாரா 30 போட்டிகளில் 390 ரன்களையே எடுத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட்டும் 100க்கும் கீழ்தான்.

இந்நிலையில் சேவாக் கூறும்போது, “ஹஷிம் ஆம்லா வேறுபட்ட வடிவங்களுக்கேற்ப ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் வித்தையை அறிந்து வைத்துள்ளார். புஜாராவைப் பொறுத்தமட்டில் நாங்கள் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்த்தோம், ஆனால் அவர் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க அவர் உயரவில்லை.

எனவே புஜாராவும் ஆம்லா போல் தனது ஸ்ட்ரோக் பிளேயில் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அப்படி அவர் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லையெனில் எதிர்காலத்தில் கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ஆடுவது கடினம்” என்றார் சேவாக்.

SCROLL FOR NEXT