மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி யில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் போட்டி தரவரிசையில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரவிடம் தோல்வியடைந்தார்.
4-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் 7-6 (7-5), 7-6 (7-4) என்ற நேர் செட்டில் 14-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். 5-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் பிரான்சின் நிக்கோலஸ் மஹூட்டை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 12-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 6-3 என்ற நேர்செட்டில் செக் குடியரசின் லூசி சபரோவாவை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவு கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி 6- 4, 6-1 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் வானியா கிங், கஜகஸ்தானின் யரோஸ்லோவா ஷெவ்டோவா ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.