விளையாட்டு

ஐபிஎல் முந்தைய அணியான கொச்சி டஸ்கர்ஸ் வீர்ர்களுக்கு சம்பள நிலுவையால் சர்ச்சை

இரா.முத்துக்குமார்

2011 ஐபிஎல் தொடரில் விளையாடிய கொச்சி டஸ்கர்ஸ் அணி வீரர்களுக்கு பிசிசிஐ இன்னமும் சம்பளபாக்கியை அளிக்காத விவகாரம் தற்போது எழுந்துள்ளது.

2011 ஐபிஎல் தொடரில் கொச்சி கிரிக்கெட் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கொச்சி டஸ்கர்ஸ் அணி களமிறங்கியது. முதல் சீசனில் 8-ம் இடத்தில் முடிந்தது அந்த அணி. வங்கி உத்தரவாதத் தொகையை செலுத்தாததால் வீரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிசிசிஐ.

பிரெண்டன் மெக்கல்லம், ரவீந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், முத்தையா முரளிதரன், பிராட் ஹாட்ஜ், லஷ்மண் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்ற பெருந்தலைகள் ஆவர்.

இந்நிலையில் கொச்சி டஸ்கர்ஸ் அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் கோர்ட் நியமித்த தீர்ப்பாயம் ரூ550 கோடி இழப்பீடாக கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில் 2015 ஐபிஎல் கிரிக்கெட்டில் காயம் காரணமாக ஆட முடியாத மொகமது ஷமிக்கு பிசிசிஐ ரூ.2.2 கோடி அளிக்க முன்வந்துள்ளதையடுத்து கொச்சி டஸ்கர்ஸ் விவகாரமும் தலைதூக்கியுள்ளது.

இதனையடுத்து கொச்சி டஸ்கர்ஸுக்கு ஆடிய பிராட் ஹாட்ஜ் ட்வீட் செய்யும் போது, “ஐபிஎல் 2015-ல் காயத்தினால் ஆட முடியாத மொகமது ஷமிக்கு இழப்பீடு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோச்சி டஸ்கர்ஸ் அணி வீரர்களுக்கும் இழப்பீடு அளிக்க பிசிசிஐ முன்வருமா?” என்று கேட்டிருந்தார்.

முத்தையா முரளிதரனும் பிசிசிஐ தனக்கு இன்னும் 40% தொகையை நிலுவையில் வைத்துள்ளது என்று கூறியிருக்கிறார். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு முத்தையா முரளிதரன் கூறும்போது, “எனக்கு பிசிசிஐ 4 லட்சம் டாலர்கள் கொடுக்க வேண்டும், கொச்சி கேப்டன் மகேலாவுக்கு 5 லட்சம் டாலர்கள் அளிக்க வேண்டும். நான் இது குறித்து பிசிசிஐ அதிகாரிகளிடம் ஏகப்பட்ட முறை பேசியும் எழுதியும் வந்துள்ளேன். அவர்கள் உறுதி அளித்தனர் ஆனால் இன்னமும் எதுவும் நடக்கவில்லை. கொச்சி வீரர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2 மில்லியன் டாலர்கள் அளிக்க வேண்டியுள்ளது. அணி உரிமையாளர்கள் எங்களுக்கு 60% தொகையை அளித்துள்ளனர், மீதி 40% தொகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் உலகில் பல லீகுகளில் விளையாடியுள்ளேன். ஆனால் எந்த ஒரு வாரியமும் இப்படிப்பட்ட ஒன்றை எங்களுக்குச் செய்ததில்லை. வீர்ர்கள் போலவே வாரியமும் தங்கள் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். வீரர்களிடத்தில் அவர்களுக்கு அக்கறையின்மையை இது காட்டுகிறது. தொடரை நடத்த வேண்டும் என்பதில்தான் அவர்கள் கவனம் செல்கிறது.

நான், மகேலா போன்றவர்கள் குடும்பத்தை நடத்த இந்தப் பணம் அவசியமில்லை என்றாலும் அதிகம் அறியப்படாத வீரர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு இந்தத் தொகை பெரிதாக இருக்கலாம். சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவருக்கு 80% தொகை இன்னமும் அளிக்கப்படவில்லை என்று கூட நான் கேள்விப்பட்டேன்.

ஐபிஎல் கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அனைத்தையும் எங்கள் முடிவுக்கு இலங்கை வாரியம் விட்டுவிடும். டிம் மே தலைமையிலான சர்வதேச வீர்ர்கள் சங்கத்தை பிசிசிஐ அங்கீகரிக்கவில்லை. இதனால் அவர்களிடம் செல்வதில் அர்த்தமில்லை. இந்திய நீதிமன்றங்களில் பிசிசிஐ மீது நான் வழக்கு தொடர விரும்பவில்லை. ஏனெனில் வழக்கு ஆண்டுக்கணக்கில் இழுவையாகும் என்பது எனக்கு தெரியும்” என்கிறார் முத்தையா முரளிதரன்.

SCROLL FOR NEXT