விளையாட்டு

199 ரன்கள் குவித்து மிரட்டியது கோவை: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வாரியர்ஸ் இன்று மோதல்

செய்திப்பிரிவு

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலி யில் நடைபெற்ற ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை தோற் கடித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.

முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஜெகதீசன்-கங்கா தர் ராஜூ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்தது. தர் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜெகதீசன் 87 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சுப்பிரமணிய சிவா 1, சன்னி குமார் சிங் 2, விவேக் 16 ரன்கள் சேர்த்தனர். திருவள்ளூர் அணி தரப்பில் ஜெகநாத் சீனிவாஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

164 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருவள்ளூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணி தரப்பில் நடராஜன், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். திண்டுக்கல் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அந்த அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

தொடரின் 10-வது நாளான நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தருண் நிவாஸ் 45, ரோகித் 40, சூர்யபிரகாஷ் 36, அனிருத் சீதா ராம் 26 ரன்கள் எடுத்தனர். மதுரை அணி தரப்பில் தியாகராஜன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 200 ரன்கள் இலக்குடன் மதுரை பேட் செய்ய தொடங்கியது.

இன்று 2 ஆட்டங்கள்

தொடரின் 11-வது நாளான இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிற்பகல் 2.30 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. மாலை 6.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

SCROLL FOR NEXT