குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் நிகழ்த்தப்பட்டிருந்த 9 ஆண்டுகால சாதனையை முறியடித்து அந்த சாதனையை தன்வசமாக்கியிருக்கிறார் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயது தமிழ்ச்செல்வி.
100 மீ., 200 மீ., 4x100 மீ. மற்றும் மெட்லி ரிலே ஆகிய ஓட்டப் பந்தயங்களில் ஏராளமான பதக்கங்களைக் குவித்திருக்கும் தமிழ்ச்செல்வி, தண்டையார்பேட்டையில் உள்ள டி.எஸ்.டி. ராஜா மெட்ரிக். மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் தடகளப் பயணம் 5 வயதில் தொடங்கியிருக்கிறது.
பள்ளியில் படித்தபோது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்ச்செல்வி, பின்னர் பள்ளிகள் இடையிலான தடகளப் போட்டி, சென்னை மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, மண்டல அளவிலான போட்டி, மாநில அளவிலான போட்டி, தேசிய அளவிலான போட்டி ஆகியவற்றில் பங்கேற்று கணிசமான அளவுக்கு பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு காரைக்குடியில் நடந்த மாநில ஓபன் தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4x100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றதோடு, சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் பெங் களூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற தமிழ்ச்செல்வி, 100 மீ. ஓட்டம், மெட்லி ரிலே ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றார். அதன்பிறகு மதுரையில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் வெண்கலமும், 200 மீ. ஓட்டத்தில் வெள்ளியும், மெட்லி ரிலேவில் தங்கப் பதக்கமும் வென்று கொச்சியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றார். அதில் 200 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில ஓபன் தடகளப் போட்டியில் 100 மீ., 200 மீ., 4x100 மீ. ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற தமிழ்ச்செல்வி, 100 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
200மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றதோடு, 25.8 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் புதிய சாதனையும் படைத்தார். முன்னதாக 2005-ல் கோவையைச் சேர்ந்த கௌசல்யா என்ற வீராங்கனை 26.1 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. அந்த 9 ஆண்டுகால சாதனையை இப்போது தமிழ்ச்செல்வி முறியடித்திருக்கிறார்.
பெங்களூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டம் மற்றும் மெட்லி ரிலேவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்ச்செல்வியைப் பாராட்டி அவருடைய பள்ளி நிர்வாகம் ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கியிருக்கிறது.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்திருக்கும் தமிழ்ச்செல்வியின் அடுத்த இலக்கு தேசிய அளவிலான போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் ஜொலிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக சென்னை நேரு மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ்ச்செல்வியை சந்தித்தபோது அவர் கூறியது:
100 மீ. ஓட்டம் மற்றும் 200 மீ. ஓட்டங்களில் சில இலக்குகளை நிர்ணயித்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் பயிற்சியாளர் ராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறேன். நான் தடகளத்தில் குதிப்பதற்கு காரணம் எனது உடற்பயிற்சி ஆசிரியை மங்கள சௌந்தர்யா என்றால், இன்று ஜெயிப்பதற்கு பயிற்சியாளர் ராஜன்தான் காரணம்.
இதேபோல் எனது அப்பா வெங்கடேஷ், அம்மா அமுதலட்சுமி, பெரியப்பா குருசாமி மற்றும் உறவினர்களும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். அப்பா எனக்காக பெருமளவு நேரங்களை செலவிடுவதோடு, நான் போட்டிகளில் பங்கேற்க செல்லும்போதெல்லாம் என்னுடன் வந்து எனக்கு நம்பிக்கையளிக்கிறார் என்றார்.
தனது ரோல்மாடல் உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் என்று கூறிய தமிழ்ச்செல்வி, “இந்தியாவின் தங்கமங்கை என்றழைக்கப்படும் பி.டி.உஷாவும் எனக்குப் பிடிக்கும். சென்னையில் நடைபெற்ற தடகளப் போட்டியின்போது பி.டி.உஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு நிறைய ஆலோசனைகளை அவர் வழங்கினார். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்” என்றார்.