சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல இன்னிங்ஸ்களை ஆடிவரும் விருத்திமான் சஹா அடுத்ததாக ஐபிஎல் கிரிக்கெட்டுக்குத் தயாராகி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆலோசகர் விரேந்திர சேவாகிடமிருந்து தனக்கு ‘விலைமதிப்பற்ற’ ஆலோசனைகள் கிடைத்ததாக சஹா தெரிவித்தார்.
“சேவாக் அளித்துள்ள பேட்டிங் ஆலோசனைகள் மூலம் இந்த முறை கடந்த முறையைவிட சிறந்த சீசனாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். நான் இந்திய அணியில் நுழைந்த காலத்திலிருந்தே சேவாக் நிறைய பேட்டிங் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சேவாக் கூறிய ஆலோசனைகளில், ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வது முக்கியமானது, மிகவும் முக்கியமான அறிவுரை பெரிய ஷாட்களை அடித்த பிறகு அடுத்த பந்துகளை ரன் எடுக்காமல் டாட் பால்களாக விடக்கூடாது என்பார், ஏனெனில் இது ஆட்டத்தின் உத்வேகத்தைக் கெடுத்து விடும் என்பார், மேலும் தன்னம்பிக்கை இருந்தால் நல்ல பந்துகளையும் பெரிய ஷாட்கள் ஆட வேண்டும் என்று கூறினார்.
நிச்சயமாக, டெஸ்ட் போட்டிஅக்ளில் தரமான எதிரணிகளுடன் நன்றாக ஆடிய பிறகு டி20 கிரிக்கெட்டிலும் புதிய நம்பிக்கை பிறக்கிறது. கடைசியில் எந்த வடிவம் என்பது முக்கியமல்ல களத்தில் என்ன சாதித்தோம் என்பதே பேசப்படும்.
எங்களிடம் நல்ல அணி உள்ளது, டி.நடராஜன் (தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர்) போன்ற பவுலர்கள் உள்ளனர். திறமைகள் ஆட்டத்திறனாக மாற வேண்டும், நிச்சயம் அப்படி மாறும் என்று நான் நினைக்கிறேன்” என்றார் சஹா.