இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் கான்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும் என்பதால் விராட் கோலி குழுவினர் அதிக கவனமுடன் விளையாடக்கூடும். இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்திருந்தது.
அதன்பின்னர் இதுவரை சுமார் 15 மாதங்களில் எந்தஒரு தொடரையும் இந்திய அணி பறிகொடுக்கவில்லை. இதனால் தற்போதைய டி20 தொடரை வெல்ல வேண்டுமானால் முதலில் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களம் காண்கிறது இந்திய அணி.
இன்று வெற்றி வசப்படும் பட்சத் தில் தொடர் 1-1 என சமநிலையை எட்டும். இதன் பின்னர் 1-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் கோப்பையை கைப்பற்றலாம்.
வெற்றிக்கான வேட்டை நாயக னாக வலம் வரும் விராட் கோலியின் யுக்திகள் முதல் ஆட்டத்தில் பலன் கொடுக்கவில்லை. கான்பூர் ஆட்டத்தில் அவர் தேர்வு செய்த விளையாடும் லெவன், அனைவருக்கும் சற்று வியப்பையே கொடுத்தது. இதற்கு உரிய பலன் அவருக்கு எதிர்வினையாகவே அமைந்தது.
இதனால் இன்றைய அணித் தேர்வில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும். தொடக்க பேட்ஸ்மேனாக இளம் வீரரான ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்பு உள்ளது. மேலும் பந்து வீச்சு துறையில் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. ஆசிஷ் நெஹ்ராவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், பர்வேஷ் ரசூலுக்கு பதிலாக அமித் மிஸ்ரா இடம்பெறக்கூடும்.
கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்க கோலி முடிவு செய் தால், வேகப்பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவுடன், ஜஸ்பிரித் பும்ராவே களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
போட்டி நடைபெறும் நாக்பூர் ஜம்தா மைதானத்தில் இந்திய அணி கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் லீக் ஆட்டத் தில் நியூஸிலாந்தை எதிர்த்து விளை யாடியிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி கண்டிருந்தது. நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் அசத்தியிருந்தனர்.
கான்பூர் ஆட்டத்தில் இங்கி லாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் கொடுத்தனர். இளம் வீரரான கே.எல்.ராகுலின் மோசமான பார்ம், டி 20 தொடரிலும் தொடர்வது அணியின் ஸ்திரத்தன்மையை பாதிப்பதாக அமைந்துள்ளது.
ஒருவேளை அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் அந்த இடத்தில் மன்தீப்சிங் களமிறங்கலாம். ஆனால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுக்குமா என்பது சந்தேகம்தான்.
மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரர்களான சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியின் தேவையை உணர்ந்து விளையாடினால் பலம் அதிகரிக்கும். மேலும் கான்பூர் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையே புதிய கோணத்தில் இருந்தது.
கோலி தொடக்க வீரராகவும், ரெய்னா 2-வது வீரராக களமிறங் கியதும் சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. அதிரடி வீரரான ரெய்னாவை 6-வது இடத்தில் களமிறக்குவதே சரியாக இருக்கும். 2-வது இடத்தில் மணீஷ் பாண்டேவே சரியாக இருந்திருப்பார். இந்த விஷயங்களிலும் கோலி இன்று கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
ஒருநாள் போட்டி தொடரை இழந்த மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 தொடரை வெற்றிகரமாக தொடங்கிய உற்சா கத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத் தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்பதால் அந்த அணி வீரர்கள் அனைத்து வகை யிலும் சவால் கொடுக்கக்கூடும்.
டி20 போட்டிகளுக்கான பிரத் யேக ஷாட்களை அந்த அணி வீரர்கள் கையாள்வது கூடுதல் பலமாக உள்ளது. மோர்கன், ஜோ ரூட் நல்ல பார்மில் இருப்பதால் மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் அவர் களிடம் இருந்து வெளிப்படக்கூடும்.
மோர்கன் சுழற்பந்து வீச்சாளர் களுக்கு எதிராக நேர்த்தியாக விளையாடுகிறார். அந்த அணியின் டாப் ஆர்டரில் 6 வீரர்கள் அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் என்ப தால் இன்றைய ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சாவால் கொடுப்பார்கள்.
இரண்டிலும் தோல்வி
இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் நாக்பூர் ஜம்தா மைதானத்தில் இதுவரை பத்து, டி20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா இரு ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இலங்கைக்கு எதிராக 29 ரன்கள் வித்தியாசத்திலும், நியூஸிலாந்துக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.