மாலத்தீவில் நடைபெற்ற கேரம் போட்டியில் பங்கேற்ற வத்தலகுண்டு மாணவி சத்யா, தங்கப்பதக்கம் வென்றதால், உலக கேரம் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி சத்யா (14). இவர் கடந்த வாரம், மாலத்தீவில் நடைபெற்ற கேரம் போட்டியில் இந்தியா சார்பில் இளையோருக்கான மகளிர் பிரிவில் (18 வயதுக்குள்) கலந்துகொண்டார். இதில் குழு போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் சத்யாவுடன் சென்னையை சேர்ந்த நாகஜோதி, மதுரையை சேர்ந்த அம்சவர்த்தினி, திருவாரூரை சேர்ந்த காயத்திரி மற்றும் மூன்று மாணவர்கள் என ஏழு பேர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாணவி சத்யா கூறும்போது,
‘‘மாலத்தீவில் நடைபெற்ற குழு போட்டியில் தங்கம் வென்றோம். ஐந்து போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் வெற்றி பெற்றேன். கேரம் போர்டு, பவுடர் ஆகியவை இங்குள்ளதைப் போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தது. இருந்தும் சிரமப்பட்டு வெற்றி பெற்றேன்.
தங்கப் பதக்கம் வென் றதையடுத்து உலக அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்துள்ளனர். அங்கும் சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்’’ என்றார்.
மாலத்தீவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி சத்யாவை, பள்ளி மாணவர்கள் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாளாளர் சேவியர், பள்ளி முதல்வர் ரெக்ஸ் பீட்டர், உடற்கல்வி ஆசிரியர் வெண்மணி, பயிற்சியாளர் பிரவீன் செல்வக்குமார் ஆகியோர் மாணவி சத்யாவை பாராட்டினர்.