விளையாட்டு

இனிமேலாவது பாகிஸ்தானில் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது அழைப்பு

பிடிஐ

இனிமேலாவது எங்களது நாட்டுக்கு வந்து மற்ற அணிகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன் முறையாக பட்டம் வென்ற அந்த அணிக்கு பாராட் டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இனிமேலாவது எங்களது நாட்டுக்கு பிற நாட்டு அணிகள் வருகை தந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இலங்கை அணியின் மீது தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டு அணிகளும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி தங்களது உள்நாட்டு சீசனை துபையில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றதும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியதாவது:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனையின் புகழ் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் சேரும். இந்த சாதனை இன்று, நாளை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியது அல்ல, நீண்ட காலத்துக்கு கொண்டாடத்தக்க வகையில் சிறப்பு வாய்ந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் இருக் கும் வரை இந்த சாதனை நீங்கா இடம் பெற்றிருக்கும். நாங்கள் இந்த தொடரை தரவரிசையில் 8-வது அணியாகவே எதிர்கொண்டோம். ஆனால் தற்போது தொடரை வென்றுள்ளோம். இனிமேலாவது அனைத்து நாடுகளும் பாகிஸ் தானுக்கு வந்து விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் எங்களுக்கு பெரிய அளவில் ஊக்கம் அளித்துள்ளது. நாங்கள் இழப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலையில் விளையாடினோம், தற்போது சாம்பியன்களாக உள்ளோம்.

முதல் தொடரில் விளையாடிய போதும் பஹர் ஸமான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது ஆட்டம் சாம்பியன் வீரர் போன்று இருந்தது. பாகிஸ்தான் அணியில் அவர் மிகச் சிறந்த வீரராக விளங்குவார்.

நம்ப முடியாத உணர்வாக வெற்றி உள்ளது. இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த வெற்றியை பாகிஸ்தான் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறோம். பிஎஸ்எல் டி20 தொடரில் விளையாடியதால் இளம் வீரர்கள் பயன் அடைந்துள்ளனர். வெற்றியின் புகழ் அனைத்தும் எங்களது பந்து வீச்சாளர்களான முகமது அமிர், ஹசன் அலி, ஷதாப் கான், ஜூனைத் கான், முகமது ஹபீஸ் ஆகியோரையே சேரும்.

நீண்ட ஆண்டுளாக நாங்கள் சொந்த நாட்டில் விளையாட வேண்டிய போட்டிகளை துபையில் விளையாடி வருகிறோம். மற்ற அணிகளைப் போன்று சொந்த நாட்டு சாதகங்கள் எங்களுக்கு அமைவதில்லை. தற்போதைய வெற்றியின் மூலம், பாகிஸ்தான் வந்து விளையாடும்படி மற்ற நாட்டு அணிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT