பிரிட்டன் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன், 1.2 பில்லியன் மக்கள் தொகை உள்ள இந்திய நாடு ரியோ ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களையே வென்றுள்ளது, ஒரு தங்கம் கூட வெல்லவில்லை என்று கூறியதற்கு இந்திய முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி வென்றதற்கான ‘மேலதிக’ இந்திய கொண்டாட்டங்களை விமர்சித்த பியர்ஸ் மோர்கன், “1.2பில்லியன் மக்கள் தொகை உள்ள நாடு தோற்ற 2 பதக்கங்களை கொண்டாடுவது எவ்வளவு தர்மசங்கடமானது. 1,200,000,000 மக்கள் ஆனால் ஒரு ஒலிம்பிதங்கம் கூட இல்லை, கமான் இந்தியா! இது வெட்கக் கேடானது, பயிற்சி செய்யுங்கள்” என்று இரண்டு ட்விட்டர்களில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்திய ட்விட்டர்வாசிகள் பியர்ஸ் மோர்கனை இலக்காக எடுத்துக் கொண்டு சாடியதும் நடந்தது. ஷேன் வார்ன் கூட இந்த கருத்து மோசமானது என்று கூறியிருந்தார்.
ஆனால் சேவாக் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை வைத்து பியர்ஸ் மோர்கனை கிண்டல் அடித்தார், “நாங்கள் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் கொண்டாடுவோம். இங்கிலாந்து கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு ஆனால் இன்னும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லவில்லை. ஆனால் தொடர்து உலகக்கோப்பையில் ஆடிவருகிறது, இது தர்மசங்கடம் இல்லையா?” என்று பதிலடி கொடுத்தார்.
ஆனால் இதற்கும் பதில் அளித்த பியர்ஸ் மோர்கன், “உண்மையில் சங்கடம்தான் லெஜண்ட். கெவின் பீட்டர்சன் ஆடியிருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வென்றிருப்போம், நாங்கள் டி20 உலகக்கோப்பையை வென்ற போது பீட்டர்சன் தொடர் நாயகன்” என்று கூறியிருந்தார்.
முன்பொரு முறை வர்ணனை அறையில் நாசர் ஹுசைன், இந்தியா ஃபிபா உலகக்கோப்பை கால்பந்தில் நுழைய முடியவில்லை என்று கூறிய போது அருகில் இருந்த சவுரவ் கங்குலி 1966-ல் கோப்பையை வென்ற பிறகு எந்த உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து சோபிக்கவில்லையே என்று கூறியது நினைவுகூரத் தக்கது.