ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளார். அதேவேளையில் ஆல்ரவுண்டர் வரிசையில் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
3-வது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 847 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் இரு டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து இதுவரை 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சதம் அடித்த நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் (130) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். வில்லியம்சன் தற்போது 869 புள்ளிகளுடன் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் 848 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 6-வது இடத்தில் நீடிக்கிறார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரு இடங்களில் எந்வித மாற்றமும் இல்லை. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர். அதேவேளையில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் 434 புள்ளிகளுடன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 403 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.