விளையாட்டு

கிறிஸ் மோரிசை பின்னுக்குத் தள்ளும் டெல்லி டேர் டெவில்ஸ்

இரா.முத்துக்குமார்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி இலக்கைத் துரத்தும் போது டவுன் ஆர்டரில் தவறு செய்தது.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்ஸ் நிதானமாகத் தொடங்கி பிறகு அதிரடி முறையில் ஆடி, 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்தார், ஷிகர் தவண் 70 ரன்கள் விளாச 20 ஓவர்களில் 191 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி 105/3 என்று 13-வது ஓவர் முடிவில் இருந்தது. 7 ஓவர்களில் 87 ரன்கள் என்பது மிகக்கடினமானதுதான்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கிறார், அப்போது கிறிஸ் மோரிஸை அனுப்பியிருக்க வேண்டும், காரணம் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 238.7.

ஆனால் இவருக்குப் பதிலாக ஆஞ்சேலோ மேத்யூஸ் களமிறக்கப்பட்டார். ஆனால் அவரோ 23 பந்துகளில் 31 ரன்களை எடுத்து 20-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். கிறிஸ் மோரிஸுக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. மேலும் அதிரடி வீரர் ஸ்ரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார். அவருக்கும் கடைசி 5 ஓவர்களில் 12 பந்துகளே ஸ்ட்ரைக் கிடைத்தது.

இதனால் 176 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வி தழுவியது. ஒருவேளை கிறிஸ் மோரிசை இறக்கியிருந்தால் டெல்லி அணி வெற்றி பெற்றிருக்கலாம்.

SCROLL FOR NEXT