கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது.
முதலில் பேட் செய்த இலங்கை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 47-வது ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
இந்தப் போட்டியில், 52 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக ஒருநாள் விக்கெட்டுகளுக்கான உலக சாதனையை நிகழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க், இதற்கு முன்பாக சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக ஒருநாள் 100 விக்கெட்டுகளுக்கான சாதனையை வைத்திருந்தார்.
ஸ்டார்க் வழக்கம் போல் தனது ஆற்றலில் சோர்வடையாமல் வீசினார், முதல் ஓவரிலேயே குசல் பெரேராவின் ஆஃப் ஸ்டம்பைப் பெயர்த்தார். பிறகு தனஞ்ஜெய டிசில்வாவை வேகம் குறைக்கப்பட்ட பந்தில் வீழ்த்தி அதிவேக 100 விக்கெட்டுகளுக்கான சாதனையை நிகழ்த்தினார். மீண்டும் வீசவந்த போது மிலிந்த சிரிவர்தனாவையும் ஒரு அபாரமான வேகம் குறைக்கப்பட்ட பந்தில் குழப்பி வீழ்த்தினார். 10 ஓவர்கள் 1 மெய்டன் 32 ரன்கள் 3 விக்கெட்டுகள் என்று அசத்தினார் ஸ்டார்க்.
அதே போல் மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபாக்னரும் குசல் மெண்டிஸை புல் ஷாட்டில் தவறிழைக்கச் செய்து வீழ்த்தினார், பிறகு அதே ஓவரில் கேப்டன் மேத்யூஸும் ரன் எடுக்காமல் பாயிண்டில் அபாரமாக ஹெட் பிடித்த கேட்சுக்கு வெளியேறினார். இதன் பிறகு ஸ்டார்க் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்த 124/2 என்று இருந்த இலங்கை 132/5 என்று ஆனது.
சந்திமால் மீண்டுமொரு முறை அபாரமாக ஒரு முனையில் ஆடி 118 பந்துகளில் 3 பவுண்டர்களுடன் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், ஆனால் இவர் இருந்தும் ஸ்கோரை 250 என்ற இலக்குக்கு கொண்டு செல்ல முடியவில்லை. கடைசியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது இலங்கை.
ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்த பாக்னர் 10 ஓவர் 1 மெய்டன் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹேசில்வுட் மட்டுமே கொஞ்சம் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தவரானார்.
இலக்கைத் துரத்தும் போது ஆஸ்திரேலியாவின் ஸ்பின் பிரச்சினை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் 3 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களுடன் 3 பகுதி நேர ஸ்பின்னர்களும் இலங்கை அணியில் இருந்தனர், ஆனால் இம்முறை திலுருவன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் சந்தகன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினாலும் ஏரோன் ஃபிஞ்ச் 46 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 56 ரன்களையும், கேப்டன் ஸ்மித் 92 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 26 ரன்களையும், ஜார்ஜ் பெய்லி 39 ரன்களையும் சேர்க்க ஆஸ்திரேலியா எளிதாகவே வெற்றி பெற்றது.
கடைசியில் ஏறக்குறைய வெற்றி உறுதியானவுடன் ஆஸ்திரேலியா 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது, இன்னும் 30 ரன்கள் இருந்திருந்தால் ஒருவேளை நாம் வென்றிருக்கலாமோ என்ற நப்பாசையை இலங்கை அணிக்கு ஏற்படுத்தியிருக்கும்.
ஆட்ட நாயகனாக பாக்னர் தேர்வு செய்யப்பட்டார்.