ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தை ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான குழு மீண்டும் விசாரிக்க பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவராக இருந்த என்.சீனிவாசன், அவரது மருமகன் குருநாத்மெய்யப்பன் மற்றும் 11 கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றம் சாட்டியது.
இதையடுத்து, பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் நீக்கப்பட்டு, காவஸ்கர் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்த பிசிசிஐ பரிந்துரை செய்த மூவர் பட்டியலை நிராகரித்த உச்சநீதிமன்றம், முத்கல் குழுவே மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.கே.பட்னாயக், இப்ராஹிம்கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினி சிதம்பரம், “தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதியாக கலந்து கொள்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அதற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், “அதுபற்றி இப்போது எங்களுக்கு கவலையில்லை. சூதாட்ட விசாரணையில் மட்டும் இப்போது கவனம் செலுத்துவோம்” என்றனர்.
முன்னதாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கூறியதாவது: மீண்டும் விசாரணை நடத்த முத்கல் ஒப்புக்கொண்டார். தனது குழுவில் முன்னாள் சிபிஐ இயக்குநர் எம்.எல்.சர்மா, காவல்துறை உதவி கமிஷனர் அந்தஸ்தில் சென்னை, டெல்லி, மும்பையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி, புகழ்பெற்ற, நேர்மையான கிரிக்கெட் வீரர் ஒருவர் இடம்பெற வேண்டும். விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நான்கு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று முத்கல் கோரியுள்ளார். இவ்வாறு கோபால் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஆனால், முத்கல் குழு மீண்டும் விசாரணை நடத்த பிசிசிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை பிசிசிஐ தலைவராக சீனிவாசன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதையடுத்து, சூதாட்ட புகார் விசாரணை குறித்த உத்தரவை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.