தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
5-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் போட்டி தரவரிசையின் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் ஆல்பர்ட் ரமோஸ், 96-ம் நிலை வீரரான இஸ்ரேலை சேர்ந்த டுடி செலாவுடன் மோதினார்.
சுமார் 1 மணி நேரம் 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ரமோஸை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் டுடி செலா. மற்றாரு கால் இறுதியில் 99-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மேட்வேதேவ் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீரரான ஸ்லோவேகியாவின் ஜோசப் கோவிலக்கை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந் தார்.
3-வது கால் இறுதி ஆட்டத்தில் போட்டி தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் பெனோயிட் பேர் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் அல்ஜாஸ் பெடேனை வீழ்த் தினார்.
இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பூரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் அர்ஜென்டினாவின் ஆன்ட்ரேஸ் மோல்டெனி, குயிலர்மோ துரன் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.