நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 46 பந்துகளில் சதம் அடித்தது டி20-யில் 2-வது அதிவேக சதமாகும்.
போட்டியின் சுவையான தகவல்கள் சில:
தென் ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 45 பந்துகளில் அடித்த டி20 சதமே உலக சாதனையாக இருந்து வருகிறது, கே.எல்.ராகுல் 46 பந்துகளில் சதம் கண்டு தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.
மே.இ.தீவுகள் வீரர் எவின் லூயிஸ் 48 பந்துகளில் நேற்று சதம் அடித்தது 6-வது அதிவேக சதமாகும். கிறிஸ் கெயில் 47 பந்துகளில் சதம் அடித்ததே மே.இ.தீவுகளுக்கான சாதனையாகும், எவின் லூயிஸ் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில் காயம் காரணமாக ஆடாத வாய்ப்பை லூயிஸ் அருமையாக பயன்படுத்திக் கொண்டார், அசாதாரணமான ஷாட்களையும் ஆடி மகிழ்வித்தார்.
ஸ்டூவர்ட் பின்னி ஒரே ஓவரில் 32 ரன்கள் கொடுத்து இசாந்த் சர்மா ஒருநாள் போட்டி ஒன்றில் 30 ரன்கள் கொடுத்ததை மறக்கடித்துள்ளார். டி20-யில் முன்பு வெய்ன் பார்னெல் ஆப்கன் வீரர் தவ்லத்சாய் ஆகியோரும் 32 ரன்களைக் கொடுத்தனர். நேற்று பின்னி லூயிஸிடம் சிக்கி பின்னி எடுக்கப்பட்டார், 5 சிக்சர்கள் விளாசினார் லூயிஸ்.
நேற்று அடிக்கப்பட்ட மொத்த 489 ரன்கள் எந்த ஒரு டி20 போட்டிக்கும் அதிகமான ரன் சேர்க்கையாகும். தென் ஆப்பிரிக்கா-மே.இ.தீவுகள் மோதிய 2015 ஜோஹன்னஸ்பர்க் போட்டியில் 467 ரன்கள் குவிக்கப்பட்டது.
அதே போல் இந்த டி20 போட்டியில் மொத்தம் 32 சிக்சர்கள் விளாசப்பட்டது, இது எந்த ஒரு டி20 போட்டிக்கும் அதிகமானது. அயர்லாந்து நெதர்லாந்து போட்டி ஒன்றில் 2014 உலகக்கோப்பை டி20-யில் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகமாக இருந்தது.
முதல் 10 ஓவர்களில் இரு அணியினரும் சேர்ந்து எடுத்த ரன்கள் 248; மே.இ.தீவுகள் 132 ரன்களையும், இந்தியா 116 ரன்களை எடுத்ததும் புதிய சாதனையாகும். மொத்த ரன்களில் முதல் 10 ஓவர்களில் 251 ரன்கள் கண்ட போட்டி 2015 ஜோஹன்னஸ்பர்க் தெ.ஆ. மே.இ.தீவுகள் போட்டியாகும்.