2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்வி தனது வாழ்நாளின் மிகப்பெரிய ஏமாற்றம் என்று ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது சுயசரிதை நூலில் நொந்து கொண்டுள்ளார்
அந்தத் தோல்வியினால் இருதயம் நொறுங்கி விட்டது என்று கூறியுள்ளார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.
AB: The Autobiography என்ற சுயசரிதை நூலில் ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது அணி அடைந்த ஏமாற்றத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
கடைசி அத்தியாயத்திற்கு முதல் அத்தியாயமான ’த ட்ரீம்’ என்பதில் 2015 உலகக்கோப்பை போட்டித் தொடரை ஆழமாக விவாதித்துள்ளார் டிவில்லியர்ஸ்.
காலிறுதியில் இலங்கையை வீழ்த்திய பிறகு அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக அதே தென் ஆப்பிரிக்க அணிதான் களமிறங்கும் என்று தான் உறுதியாக நம்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, தென் ஆப்பிரிக்க அணி கூட்டத்திற்கு முன்பாகவே, தனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அதில் பிலாண்டர் உடற்தகுதி பெற்று விட்டார், அவர் கைல் அபாட்டுக்கு பதில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
வெர்னன் பிலாண்டரின் ஸ்விங் நியூஸிலாந்தில் உதவக்கூடுமென்று தேர்வுக்குழுவினர் நினைத்தாலும், “பிற பரிசீலனைகளும்” அவரது தேர்வை தீர்மானித்திருக்கலாம் என்று டிவில்லியர்ஸ் கருதியதாக தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது வெள்ளையர் அல்லாத வீரர்களை அணியில் சேர்க்க அங்கு ஒதுக்கீடு முறை உள்ளதைக் குறிப்பிட்ட டிவில்லியர்ஸ், “தென் ஆப்பிரிக்க தேசிய கிரிக்கெட் நிர்வாகம் மட்டுமே தேசிய அணியில் வெள்ளையர் அல்லாத பிற நிற வீரர்களை அணியில் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துக் கொள்ளாத அணி என்று நாங்கள் பொதுவாக நினைத்தோம். ஆனால் அணியில் ஒரு சமச்சீர் நிலை வேண்டும் என்பதற்காக வெள்ளையர் அல்லாத 4 வீரர்களை அணியில் சேர்ப்பது என்ற முடிவை அவர்கள் எடுத்திருந்தனர். அதனால் வெர்னன் பிலாண்டர் அணியில் சேர்க்கப்பட்டார். கைல் அபாட், அதிகாரபூர்வமாக வெள்ளை இனத்தை சேர்ந்தவர். முழுதும் கிரிக்கெட் காரணங்களா அல்லது இட ஒதுக்கீடு முறையால் நிகழ்ந்ததா?”என்று கேள்வி எழுப்பிய டிவில்லியர்ஸ், இதற்கு விடையை நேரடியாகத் தெரிவிக்கவில்லை.
”வழக்கொழிந்து போன நிறபேத அடிப்படையில் எனது சக வீரர்களை நான் வைத்துப் பார்க்க முடியவில்லை. இது எனக்கு மனச்சோர்வையும் கவலையையும் அளித்தது. அணியில் பிற நிறத்தவர்கள் 3 அல்லது 4 பேர் இருப்பதை யாராவது ஒரு பிரச்சினையாகக் கருதுவார்களா?” என்று கேட்டுள்ளார்.
ஆனாலும் தோற்றதற்கு டிவில்லியர்ஸ், “வாய்ப்புகளை தவறவிட்டதே காரணம்” என்று கூறியுள்ளார். ”கைல் அபாட்டுக்குப் பதிலாக வெர்னன் பிலாண்டர் ஆடியதால் நாங்கள் தோற்கவில்லை” என்று திட்டவட்டமாக எழுதியுள்ளார்.
“முக்கியத்துவம் வாய்ந்த பரந்துபட்ட விவகாரங்களுக்கு நான் குருடனாக இல்லை. தென் ஆப்பிரிக்க அணியில் நடைபெறும் மாற்றங்கள் அணி மீது சுமத்தப்படுவதகா இருக்கக் கூடாது என்றே கருதுகிறேன், ஆனால் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது அறவியல் ரீதியாக மிகவும் சரியான முடிவே, அப்படித்தான் செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
“தென் ஆப்பிரிக்க அணிக்காக உலகக்கோப்பையை வெல்வது எனக்குள் எரிந்து கொண்டிருக்கும் லட்சியம்” என்று எழுதியுள்ளார்.