இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பூடகமான செயல்களையும் ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லோதா கமிட்டி, கிரிக்கெட் வாரியங்கள் போட்டியில் டிக்கெட் வருவாய் மற்றும் இலவச பாஸ் விநியோக ஆகிய விவரங்களை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“இலவச பாஸ்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய டிக்கெட் அளவைக் குறைக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் டிக்கெட் விற்பனை மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டப்படுகிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இலவச டிக்கெட்டுகள் பெரும்பாலும் நண்பர்கள், அரசுத்துறையினர்கள், மற்றும் சில முக்கிய பிரபலஸ்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இம்மாதிரி நிறைய பேர்களுக்கு இந்த இலவச பாஸ் செல்கிறது. இவை எங்கு செல்கிறது என்பதற்கான கணக்கு வழக்குகள் இல்லை. வெளியிடப்படுவதில்லை. உண்மை மக்கள் முன்னிலையில் வைக்கப்படுவதில்லை. கிரிக்கெட் வாரியங்களில் பாஸ்கள் பெரிய அளவில் பங்கு செலுத்துகிறது என்பதை நாம் அறிவோம். சமூகத்தில் சில பிரிவினருக்கு மட்டுமே இந்த பாஸ் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுஏன்?
இலவச டிக்கெட்டுகள், இலவச பாஸ்கள் வழங்கப்படுவதற்கான அடிப்படை என்ன? பொது மக்களுக்கு எந்த அளவுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கச் செய்யப்படுகிறது? இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு வெளிப்படையாக உள்ளன? அரசுத்துறையினருக்கும் சட்டத்துறையினருக்கும் டிக்கெட்டுகளையும், பாஸ்களையும் வழங்குவதற்கான கொள்கைகள் என்ன? எனவே குறைதீர்ப்பாளரிடம் இது குறித்து மக்கள் புகார்கள் என்னவென்பதைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
தகவலுரிமைச் சட்டம் இங்கு இல்லை என்பதால், மாநில கிரிக்கெட் வாரியங்களே இந்த விவகாரங்களை வெளிப்படையாகக் கையாண்டு மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். பாஸ்கள் யாருக்கு எவ்வளவு செல்கிறது, சமூகத்தின் எந்தப் பிரிவினர் இதனால் பயனடைகின்றனர், டிக்கெட் விற்பனை வருவாய் எவ்வளவு ஆகிய விவரங்களை மாநில கிரிக்கெட் வாரியங்களே வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்றார்.இலவச பாஸ்கள் வழங்குவது என்பது மாநில கிரிக்கெட் வாரியங்களின் பெரிய பிரச்சினைதான். ஐபிஎல் 2012-ன் போது பெங்களூர் முனிசிபல் கார்ப்பரேஷன் 450 இலவசா பாஸ்களைக் கேட்ட போது கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மறுத்தது.
சமீபத்தில் முன்னாள் வங்காள கிரிக்கெட் சங்கச் செயலர் பிஸ்வரூப் தேவ் என்பவர் சவுரவ் கங்குலி நிர்வாகம் தனக்கு இலவச பாஸ்களை அளிக்காதது ‘அநீதி’ என்று வர்ணித்திருந்தார்.