ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடக அணி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பையை வென்று மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக வீரர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் சித்தராமையா கூறியுள்ளார். முன்னதாக ஹைதராபாதில் நடைபெற்ற ரஞ்சி இறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிர அணியை கர்நாடக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 7-வது முறையாக கர்நாடக அணி ரஞ்சி கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 1999-ம் ஆண்டில் இக்கோப்பையை அந்த அணி வென்றிருந்தது.
சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடக அணிக்கு ரூ.2 கோடியும், இரண்டாமிடம் பிடித்த மகாராஷ்டிர அணிக்கு ரூ.1 கோடியும் பிசிசிஐ சார்பில் ஏற்கெனவே பரிசு வழங்கப்பட்டுள்ளது.