வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்து சூப்பர்-10 சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு கேப்டன் போர்ட்டர்பீல்ட் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்தினார். ஜாய்ஸ் 25 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க, பாய்ன்டர் 38 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரி களுடன் 57 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கெவின் ஓ பிரையன் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக் காமல் 42 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது அயர்லாந்து.
இதையடுத்து 14.2 ஓவர்களில் இலக்கை எட்டினால் சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பீட்டர் போரனும் ஸ்டீபன் மைபர்க்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தனர். 2-வது ஓவரில் போரன் ஒரு சிக்ஸரை அடிக்க, மைபர்க் 3 சிக்ஸர்களை விளாசினார். தொடர்ந்து 4 வது ஓவரில் மேலும் 3 சிக்ஸர்களை விளாசிய மைபர்க், 17 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
6-வது ஓவரின் கடைசிப் பந்தில் போரன் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து மைபர்க் அடுத்த ஓவரில் ஆட்டமிழந் தார். அவர் 23 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார். பின்வரிசையில் டாம் கூப்பர் சிக்ஸர் மழை பொழிந்தார். அவர் 15 பந்துகளில் 6 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 13.5 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நெதர்லாந்து.
இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் அரை சதமடித்ததன் மூலம் அதிவேக அரை சதமடித்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தை அயர்லாந்தின் ஸ்டிர்லிங்குடன் பகிர்ந்து கொண்டார் மைபர்க். இதே போல் அதிக சிக்ஸர்கள் (19 சிக்ஸர்) அடித்த அணியின் வரிசை யிலும் நெதர்லாந்து முதலிடத்தைப் பிடித்தது. டி20 போட்டியில் 13.5 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களும் இந்தப் போட்டி யில் எடுக்கப்பட்டதுதான். இதற்கு முன்னதாக 2009-ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 175 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறிய நெதர்லாந்து குரூப் 1-ல் இடம்பெற்றுள்ளது. அதேபிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.