நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றால் மட்டுமே இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இந்தியா தோற்குமானால் 6 ரேட்டிங் புள்ளிகளை இழப்பதோடு, தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கும்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவற்றில் ஏதாவது ஓர் அணி முதலிடத்தைப் பிடிக்கும். அது தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரைப் பொறுத்து அமையும்.
கடந்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்திடம் இருந்து முதலிடத்தைக் கைப்பற்றிய இந்தியா, கடந்த ஓர் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் நியூஸிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்லும்பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகளை பின்னுக்குத்தள்ளி 7-வது இடத்தைப் பிடிக்கும்.
ஒருவேளை அந்த அணி இந்தியாவிடம் தொடரை இழந்தால் அதன் தரவரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது. தொடர்ந்து 8-வது இடத்திலேயே இருக்கும். இந்திய-நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் விளையாடும் இரு அணி வீரர்களில் அதிகபட்ச தரவரிசையைக் கொண்டவர் விராட் கோலி ஆவார். அவர் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.