டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆனது.
டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் வி.சங்கர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், தினேஷ் கார்த்திக் 112 ரன்கள் எடுக்க தமிழ்நாடு அணி 47.2 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்கால் தரப்பில் டெஸ்ட் வீரர் மொகமது ஷமி 26 ரன்களுகு 4 விக்கெட்டுகளையும் டிண்டா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி 45.5 ஒவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க தமிழ்நாடு அணி சாம்பியன் ஆனது.
3-வது முறையாக பெங்கால் அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தியுள்ளது. தமிழ்நாடு பேட்ஸ்மென்கள் யாரும் செட்டில் ஆகாத நிலையில் தினேஷ் கார்த்திக்கின் அனாயாச சதம் குறிப்பிடத்தகுந்தது, அதே போல் தமிழ்நாடு அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சும் முக்கியமானது. ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் 8 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் வெறும் 17 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
ராஹில் ஷா, அஸ்வின் கிரிஸ்ட், எம்.மொகமது ஆகியோரும் சிறந்த கட்டுக் கோப்புடன் வீசினர்.
குறைந்த இலக்குதானே என்று பெங்கால் தொடக்க வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 46 பந்துகளை விழுங்கி 23 ரன்களை மட்டுமே எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
கேப்டன் மனோஜ் திவாரி (32), தமிழ்நாடு கேப்டன் விஜய் சங்கர் பந்தை அதன் திசைக்கு எதிராக ஆட முனைந்தபோது பவுல்டு ஆனார். முன்காலில் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்று ஆடி தவறு செய்தார் மனோஜ் திவாரி.
சுதீப் சாட்டர்ஜி (58), அனுஷ்துப் மஜும்தார் (24) ஆகியோர் 65 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் அபராஜித் பந்தில் மஜும்தார் எல்.பி.ஆக சரிவு துரிதமானது.
அதன் பிறகு சுதிப் சாட்டர்ஜி மிக மோசமான ஸ்வீப் ஷாட்டை முயன்று இடது கை ஸ்பின்னர் சாய் கிஷோரிடம் பவுல்டு ஆனார். அதன் பிறகு ஒன்றுமில்லை 180 ரன்களுக்கு பெங்கால் ஆட்டமிழந்து தோல்வி தழுவியது.
முன்னதாக தினேஷ் கார்த்திக் அற்புதமான 14 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். பெங்கால் பவுலர்கள் இவருக்கு நன்றாகவே வீசினர், ஆனால் கார்த்திக்கின் ‘தடையில்லா பேட்டிங்கை’ கட்டுப்படுத்த முடியவில்லை. டிரைவ், புல் என்று அனாயசமாக ஆடினார் கார்த்திக்.
எதிர்முனையில் கூட்டாளிகளை இழந்தாலும் இவர் அடித்து ஆடினார். இதனால் 49/4 என்ற நிலையிலிருந்து தமிழ்நாடு அணி 217 ரன்களுக்குச் சென்றது. தினேஷ் கார்த்திக் சதம் நீங்கலாக தமிழ்நாடு அணியில் ஒருவர் கூட அரைசதமே எடுக்கவில்லை. ஆட்ட நாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.